

19 வயதுக்குட்படோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (பிப்ரவரி 3) முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
கேப்டன் சதம் விளாசல்; ஆஸ்திரேலியாவுக்கு 278 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் தாமஸ் ரியூ சதம் விளாசி அசத்தினார். அவர் 107 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, காலேப் ஃபல்கனர் 40 ரன்களும், ஃபர்ஹான் அகமது 28 ரன்களும் எடுத்தனர். ஜோசப் மூர்ஸ் 25 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் நடேன் கூரே மற்றும் ஹைடன் சில்லர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வில் பைரோம், ஆர்யன் சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!
278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.3 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஆஸ்திரேலிய அணியில் அந்த அணியின் கேப்டன் ஆலிவர் பீக் வெற்றிக்காக கடைசி வரை போராடினார். இருப்பினும், அதிரடியாக விளையாடிய அவர் 88 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிதேஷ் சாமுவேல் 47 ரன்களும், ஆர்யன் சர்மா 34 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் செபாஸ்டியன் மோர்கன், ஜேம்ஸ் மிண்டோ, லம்ஸ்டன், ரால்ஃபி ஆல்பர்ட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அலெக்ஸ் பிரெஞ்ச் மற்றும் ஃபர்ஹான் அகமது தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் தாமஸ் ரியூக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.