பத்துக்குப் பத்து.. டி20 உலகக் கோப்பையில் முறியடிக்கக் காத்திருக்கும் 10 சாதனைகள்!

டி20 உலகக் கோப்பையில் முறியடிக்கக் காத்திருக்கும் சாதனைகளைப் பற்றி...
தோனி - விராட் கோலி - ரோஹித் சர்மா
தோனி - விராட் கோலி - ரோஹித் சர்மா
Updated on
3 min read

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் 10-வது தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், இந்தத் தொடரில் எளிதில் முறியடிக்கக்கூடிய பத்து சாதனைகளை பார்க்கலாம்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப். 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது. இந்தியாவில் தில்லி, சென்னை, மும்பை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் ஜொலிப்பதற்காக இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு சாதனைகளைப் படைக்க வரிந்து கட்டிக்கொண்டுள்ளனர். அவ்வாறு எளிதில் முறியடிக்கக் காத்திருக்கும் சாதனைகள் பற்றி பார்க்கலாம்.

அதிகபட்ச ஸ்கோர்

2007 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்திருந்தது. உலகக் கோப்பைத் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதுவரை 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருக்கிறது.

2024 ஆம் ஆண்டு கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
2024 ஆம் ஆண்டு கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.

அதிக வெற்றிகள்

2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியைச் சந்திக்காமல் 8 போட்டிகளில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. இந்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி இந்த சாதனையை முறியடிக்கும்.

ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் - தனிநபர் அதிகபட்சம்

2012 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம் 58 பந்துகளில் 123 ரன்கள் குவித்ததே இதுவரை ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையாகத் தொடர்கிறது.

ஒரு தொடரில் அதிகபட்ச ரன்குவிப்பு

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 2014 ஆம் ஆண்டு 9 போட்டிகளில் விளையாடி 319 ரன்கள் குவித்திருந்தார். இதுவரை இந்த சாதனையை யாரும் நெருங்க முடியவில்லை.

அதிகபட்ச ரன்கள் - தனிநபர் அதிகபட்சம்

டி20 உலகக் கோப்பையில் இதுவரை 35 போட்டிகளில் 33 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி இதுவரை 15 அரைசதங்கள் உள்பட 1292 ரன்கள் குவித்துள்ளார்.

விராட் கோலி.
விராட் கோலி.

அவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 1013 ரன்களுடன் இந்தத் தொடரில் விளையாடுகிறார். அவர் 280 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் முதலிடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

அதிக சிக்ஸர்கள்

2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் 17 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாக திகழும் ஆடுகளங்களில் அபிசேக் சர்மா, பில் சால்ட், டிகாக், டிம் டேவிட், ஹார்திக் பாண்டியா, பின் ஆலன் உள்ளிட்ட அதிரடி சூரர்கள் இந்த சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

அதிக விக்கெட்டுகள்

இலங்கையின் வனிந்து ஹசரங்கா, ஆப்கனின் ரஷீத்கான், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா, தென்னாப்பிரிக்காவின் ஆன்ட்ரிச் நார்க்கியா ஆகியோர் முறையே ஒரே தொடரில் 14, 14, 15, 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இவர்கள் 2007 முதல் 2024 வரை வங்கதேசத்திற்காக 43 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடிப்பார்களா? என அனைவரும் ஆவலாகவுள்ளனர்.

அதிக வீரர்களை அவுட்டாக்கிய விக்கெட் கீப்பர்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக வீரர்களை அவுட்டாக்கிய (ஸ்டம்பிங், கேட்ச்) வீரர் என்ற மகத்தான சாதனையை இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னகத்தே வைத்திருக்கிறார்.

இதுவரை 33 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 32 பேரை அவுட்டாக்கியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் 30 பேரை அவுட்டாக்கியுள்ளார். அவர் தோனியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் பிரகாசமாகவுள்ளன.

ரஷீத்கான்.
ரஷீத்கான்.

சர்வதேச டி20-களில் அதிக விக்கெட்டுகள்

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும் கேப்டனுமான ரஷீத்கான், 111 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் இன்னும் 13 விக்கெட்டுகள் வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி20-களில் 200 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையைப் படைப்பார். மேலும், 4 விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் டி20-களில் 700 விக்கெட்டுகள் எடுத்த முதல்வீரர் என்ற சாதனையையும் அவர் படைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

glen maxwell
க்ளென் மேக்ஸ்வெல்படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

அதிக கேட்ச்கள்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக கேட்ச்களைப் பிடித்த ஃபீல்டர் என்ற சிறப்பான சாதனையை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (25 கேட்ச்கள்) தன்னகத்தே வைத்திருக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக சக ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 23 கேட்ச்களைப் பிடித்திருக்கிறார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் வார்னரின் சாதனையை முறியடித்து மேக்ஸ்வெல் புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

 the list of major records that players/teams can break during the 2026 edition of the ICC Men's T20 World Cup.

தோனி - விராட் கோலி - ரோஹித் சர்மா
கற்றுக்குட்டிகளின் கனவு நனவாகுமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com