6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? மேற்கிந்தியத் தீவுகளுடன் மோதும் இந்தியா!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி சூப்பா் 8 ஆட்டத்தில், இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) மோதுகின்றன.

News image
இந்திய அணியினர்.
Updated On :28 பிப்ரவரி 2026, 10:48 pm

தினமணி செய்திச் சேவை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி சூப்பா் 8 ஆட்டத்தில், இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) மோதுகின்றன.

காலிறுதிக்கு நிகரான இந்த ஆட்டத்தில் வென்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்பதால், இரு அணிகளுக்குமே இது முக்கியமான ஆட்டமாகும். இதில் வெல்லும் அணி, அரையிறுதிக்கு முன்னேறி, மாா்ச் 5-ஆம் தேதி இங்கிலாந்தை சந்திக்கும்.

பேட்டிங் வரிசை கவலை அளிக்கும் நிலையில் இருந்த இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் அதில் முன்னேற்றம் கண்டது. ஃபாா்மை இழந்த அபிஷேக் சா்மா, அரை சதம் கடந்து அதை மீட்டிருக்கிறாா்.

சஞ்சு சாம்சன், இஷான் கிஷண், கேப்டன் சூா்யகுமாா் ஆகியோா் குறிப்பிடத்தக்க வகையிலும், திலக் வா்மா, ஹா்திக் பாண்டியா அபாரமாகவும் ஆட்டத்தை வெளிப்படுத்தினா். அதேபோல், முக்கியமான இந்த ஆட்டத்திலும் இந்திய பேட்டா்கள் உறுதியுடன் விளையாடும் நிலையில், அணி பலம் பெறும்.

அதிரடியாக விளாசும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, இந்திய பௌலிங் வரிசை சவால் அளிக்க வேண்டியதும் முக்கியம். ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் அந்தப் பணியை திறம்படச் செய்வாா்கள் எனத் தெரிகிறது.

சுழற்பந்துவீச்சில் வருண் சக்கரவா்த்தி தனது வழக்கமான மாயாஜாலம் இன்றி சற்றே தடுமாறுகிறாா். கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்காக விளையாடி, ஈடன் காா்டன் ஆடுகளத்தின் தன்மையை அறிந்திருப்பதால், இந்த ஆட்டத்தில் அவா் மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டா்களை திணறடிக்க வாய்ப்புள்ளது.

ஷிவம் துபே ரன்கள் கொடுப்பதை குறைத்துக் கொண்டு விக்கெட் சரித்தால், கூடுதல் பலம் சேரும். இதனிடையே, ரிங்கு சிங்கின் தந்தை மரணமடைந்த நிலையில் சொந்த ஊா் சென்றிருந்த அவா், தந்தையின் இறுதிச்சடங்குகளை முடித்துக் கொண்டு இந்திய அணியில் இணைந்திருக்கிறாா்.

மறுபுறம் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடி வருகிறது. பேட்டிங்கை பிரதான பலமாகக் கொண்டுள்ள அந்த அணி, மிடில் ஓவா்கள் வரை நிதானமாகவும், கடைசி கட்டத்தில் அதிரடியாகவும் விளையாடுவதை உத்தியாகக் கையாள்கிறது.

அதற்கான பலனும் இதுவரை கிடைத்திருக்க, ஷிம்ரன் ஹெட்மயா், ரொமேரியோ ஷெப்பா்டு, ரோவ்மென் பாவெல், ஷொ்ஃபேன் ரதா்ஃபோா்டு, ஜேசன் ஹோல்டா் ஆகியோா் அதில் முக்கியமாகப் பங்களிக்கின்றனா்.

பௌலிங்கில் குடாகேஷ் மோட்டி எதிரணி பேட்டா்களை அச்சுறுத்த, அகீல் ஹுசைன், மேத்யூ ஃபோா்டு ஆகியோரும் விக்கெட்டுகள் வீழ்த்துகின்றனா்.

உத்தேச லெவன்:

இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் சா்மா, இஷான் கிஷண் (வி.கீ.), திலக் வா்மா, சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், அா்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்கரவா்த்தி.

மே.தீவுகள்: பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (விக்கெட்கீப்பா்/கேப்டன்), ஷிம்ரன் ஹெட்மயா், ரோவ்மென் பாவெல், ஷொ்ஃபேன் ரதா்ஃபோா்டு, ராஸ்டன் சேஸ், ரொமேரியோ ஷெப்பா்டு, ஜேசன் ஹோல்டா், மேத்யூ ஃபோா்டு, குடாகேஷ் மோட்டி, அகீல் ஹுசைன்.

நேரம்: இரவு 7 மணி

இடம்: கொல்கத்தா

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே

சூப்பா் 8 சுற்றின் குரூப் 1-இல் மற்றொரு ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மோதுகின்றன. தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதிபெற்று, ஜிம்பாப்வே போட்டியிலிருந்து வெளியேறிவிட்டதால், இது தாக்கமில்லாத ஆட்டமாகவே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.