

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடத்தப்படவுள்ளது. டி20 போட்டிகள் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துவிட்டதால், குறைவான அளவிலேயே ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன.
உலகெங்கிலும் டி20 கிரிக்கெட் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒருநாள் போட்டிகளின் முக்கியத்துவம் குறைந்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளுக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் குறித்து எனக்கு சிறிது கவலையாக இருக்கிறது.
ரசிகர்கள் எந்த வடிவிலான போட்டியைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கென தனி இடம் இருப்பதாக உணர்கிறேன். ஆனால், ஒருநாள் போட்டிகளுக்கு அப்படியில்லை. விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடியதும், மக்கள் ஒருநாள் போட்டிகளை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
தனிப்பட்ட வீரர்களைக் காட்டிலும் விளையாட்டு பெரிது என்பதை நாம் அறிவோம். ஆனால், அந்த விளையாட்டின் முக்கியத்துவத்தை ரசிகர்கள் உணர்வதற்கு ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் விளையாட வேண்டியிருக்கிறது. உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே தொடரின் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவதால் ரசிகர்கள் பார்க்கின்றனர். இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால் என்னவாகும்?
ஒரு காலத்தில் ஒருநாள் கிரிக்கெட் மிகவும் அற்புதமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், அந்த காலக்கட்டத்தில் ஒருநாள் வடிவிலான போட்டிகள் மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்களை நமக்கு கொடுத்தது. தோனி 10-15 ஓவர்களுக்கு சிங்கிள் எடுப்பார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார். தோனி போன்ற வீரர்களை இனிமேல் நாம் பார்க்கப் போவதில்லை.
உண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் தொடர வேண்டுமென்றால், டி20 லீக் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போன்றவை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தினால், மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் போட்டிகளைக் காண வருவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.