

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஆஃப் ஸ்பின், விக்கெட் கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்துள்ளதாக மனம் திறந்துள்ளார்.
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா மிகவும் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி பேட்டர்களை திணற வைப்பதில் மிகவும் திறமைசாலி. அவரது பந்துவீச்சு திறமை குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா இதெல்லாம் செய்துள்ளாரா என ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள அந்த விடியோவில் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் கீப்பிங் க்ளௌசை அணிந்துள்ளார். விக்கெட் கீப்பிங் க்ளௌசை அணிந்து பயிற்சி மேற்கொள்வது போன்று வெளியிடப்பட்டுள்ள விடியோவில் ஜஸ்பிரித் பும்ரா சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
விடியோவில் ஜஸ்பிரித் பும்ரா பகிர்ந்து கொண்டதாவது: என்னுடைய பல்கலைக்கழகத்துக்காக கல்லூரி சார்பில் விளையாடியப் போட்டி ஒன்றில் நான் ஆஃப் ஸ்பின் வீசினேன். விக்கெட் கீப்பிங் செய்து ஒரு ஸ்டம்பிங்கும் செய்தேன். அந்தப் போட்டியில் நான் 6-வது வீரராக பேட்டிங்கும் செய்தேன். அந்தப் போட்டியில் இவை அனைத்தையும் நான் செய்தேன் என்றார்.
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டில் மட்டும் 21 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்று விளையாடினார்.
இந்திய அணிக்காக இதுவரை 224 போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, 486 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேசப் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க பும்ராவுக்கு இன்னும் 14 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.