

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது. மழை காரணமாக போட்டி 37 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக கல்லம் சாம்சன் 37 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, செல்வின் சஞ்சய் 28 ரன்களும், ஜேக்கோப் காட்டர் 23 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஆர்.எஸ்.அம்பிரிஷ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹெனில் படேல் 3 விக்கெட்டுகளையும், கிலான் படேல், முகமது எனான் மற்றும் கனிஷ்க் சௌகான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்தியா அபார வெற்றி
136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 13.3 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 27 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வைபவ் சூர்யவன்ஷி 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
நியூசிலாந்து தரப்பில் மேசன் கிளார்க், ஜாஸ்கரன் சாந்து மற்றும் செல்வின் சஞ்சய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்.எஸ்.அம்பிரிஷ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.