

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு நாளுக்கு முன்பாக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள் கலை, சமூக சேவை, பொது வாழ்க்கை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக மத்திய அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்காக 131 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் பத்ம விபூஷண், 13 பேர் பத்ம பூஷண் மற்றும் 113 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.
ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கௌருக்கு பத்மஸ்ரீ!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் இருவருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. அதன் பின், கடந்த ஆண்டு ரோஹித் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது. பல ஆண்டுகளாக தொடர்ந்த இந்திய அணியின் ஐசிசி கோப்பைக்கானத் தேடலை அடுத்தடுத்தக் கோப்பைகளுடன் முடிவுக்கு கொண்டு வந்தது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல அணியை சிறப்பாக வழிநடத்திய இவர்கள் இருவருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.