

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து - இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று (ஜனவரி 27) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஹாரி ப்ரூக், ஜோ ரூட் சதம் விளாசல்!
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் 7 ரன்களும், ரிஹான் அகமது 24 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து, ஜோ ரூட் மற்றும் ஜேக்கோப் பெத்தேல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தது. ஜேக்கோப் பெத்தேல் 72 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து, ஜோ ரூட் மற்றும் கேப்டன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். ஜோ ரூட் நிதானமாக விளையாட, ஹாரி ப்ரூக் அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 66 பந்துகளில் 136 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 108 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா டி சில்வா, வனிந்து ஹசரங்கா மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.