

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டி20 போட்டி லாகூரில் இன்று (ஜனவரி 31) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
சல்மான் அகா, உஸ்மான் கான் அதிரடி; 199 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சல்மான் அகா மற்றும் உஸ்மான் கான் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். சல்மான் அகா 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, உஸ்மான் கான் 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷதாப் கான் 28 ரன்களும், சைம் ஆயுப் 23 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பாட்ர்லெட், மேத்யூ குன்னமேன், கூப்பர் கன்னோலி, சீன் அப்பாட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தொடரை வென்ற பாகிஸ்தான்
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா, 15.4 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மேத்யூ ஷார்ட் 27 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 18 ரன்களும் எடுத்தனர். சேவியர் பார்ட்லெட் 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது மற்றும் ஷதாப் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். உஸ்மான் தாரிக் 2 விக்கெட்டுகளையும், சைம் ஆயுப் மற்றும் முகமது நவாஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சல்மான் அகாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி கடைசியாக டி20 தொடரை வென்றிருந்தது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (பிப்ரவரி 1) லாகூரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.