பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீன்... ரஞ்சியில் சதம் அடித்து கண்ணீர் விட்ட அபிஷேக் போரெல்!
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீன் வெளிவந்து சதம் விளாசிய அபிஷேக் போரெலை பற்றி...

சதம் அடித்து கண்ணீர் விட்ட அபிஷேக் போரெல்.
ரஞ்சி கோப்பை தொடரில் தில்லி அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய பெங்கால் வீரர் அபிஷேக் போரெல் கண்ணீர் விட்டு அழுதார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அபிஷேக் போரெல், 2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக், தில்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், உள்ளூர்களில் மேற்கு வங்க அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
இவர், திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருடன் பாலியல் உறவு மேற்கொண்டதாகவும், பின் அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த ஜூன் 23-ல் ஹூக்ளி மோக்ரா காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்திருந்தார்.
இருவரும் மூன்று ஆண்டுகள் காதலித்ததாகவும், அபிஷேக் போரலுடன் தான் வெளிநாடு பயணம் மேற்கொண்டதாகவும் புகாரில் அப்பெண் தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவத்தில் அபிஷேக் போரெல் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற காவல்துறையினர் ஆக. 11 ஆம் தேதி அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஒரு மாதமாக சிறையில் இருந்த அபிஷேக் போரெலுக்கு, செப். 18 ஆம் தேதி சின்சுரா நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய சில நாள்களிலேயே, தில்லிக்கு எதிரான பெங்கால் அணியில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள கல்யாணியில் நடைபெற்ற தில்லிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்து வீச 77.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தில்லி அணி 240 ரன்கள் எடுத்தது.
அதன்பின்னர் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி இரண்டு நாள்கள் முடிவில், 111 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் அபிஷேக் போரெல் 137 பந்துகளில் சதம் விளாசினார். சதம் விளாசியதும் அபிஷேக் போரெல், அந்த இடத்திலேயே உடைந்து அழுது கண்ணீர் விட்டார்.
அதன்பின்னர், சதத்தைக் கொண்டாடிய அவர் 17 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 149 ரன்கள் எடுக்க, சுதீப் குமார் 133 ரன்களும் எடுத்தனர். பெங்கால் அணி 185 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Summary
Abishek Porel scored an unbeaten century for Bengal against Delhi and broke down in tears in Kalayani on Monday. The knock came weeks after he was granted bail in a case involving allegations of rape and criminal intimidation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

