இன்று முதல் பிளேஆஃப் சுற்று தொடக்கம் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுமா தில்லி அணி?
தில்லி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் இறுதிச்சுற்றில் விளையாடியதில்லை...


இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. மும்பை, தில்லி, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் அணிகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பஞ்சாப்பின் கே.எல். ராகுலும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தில்லியின் ரபாடாவும் முதலிடம் பிடித்துள்ளார்கள். விராட் கோலி 460 ரன்கள் எடுத்து பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளார்.
இன்று முதல் இந்த வருட ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் ஆட்டங்கள் தொடங்குகின்றன. துபையில் இன்று நடைபெறவுள்ள முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். தோல்வியடையும் அணி, ஹைதராபாத் - ஆர்சிபி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு நேரங்களில் மைதானங்களின் புற்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதாக டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 17 ஆட்டங்களில் 11 ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளன. மேலும் மும்பை அணி பேட்டிங்கில் கூடுதல் பலத்துடன் உள்ளதால் அந்த அணி 2-வதாக பேட்டிங் செய்தால் வெற்றி பெறும் வாய்ப்புகளே அதிகம். எனவே தில்லி அணி இன்று 2-வது பேட்டிங் செய்யவேண்டும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
துபையில் நடைபெற்ற 24 ஆட்டங்களில் 15-ல் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. முதலில் விளையாடிய அணிகள் சராசரியாக 171 ரன்கள் எடுத்துள்ளன.
இரு அணிகளுக்கும் பலமான வேகப்பந்து வீச்சு உள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர்கள் 60 விக்கெட்டுகளும் தில்லி வேகப்பந்து வீச்சாளர்கள் 59 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். மும்பையின் பலங்களான பொலார்ட், பாண்டியா, கிருணாள் பாண்டியா ஆகிய மூவரும் பேட்டிங் செய்கிறபோது ரபாடா, நோர்கியோ போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச வேண்டும். அப்போதுதான் அவர்கள் விரைவாக ரன்கள் எடுப்பதைத் தடுக்க முடியும்.
கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது போல மும்பை கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்திலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய உடற்தகுதி முன்னேற்றம் அடைந்தால் இந்திய அணிக்கும் அது நல்ல செய்தியாக அமையும்.

தவன் எப்படி விளையாடுகிறார் என்பதும் தில்லி அணிக்கு முக்கியமானது. 5 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள தவன், 5 முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
பிளேஆஃப் ஆட்டங்களில் மும்பை அணி எப்போது ஆக்ரோஷத்துடன் விளையாடும். கடைசியாக விளையாடிய ஐந்து பிளேஆஃப் ஆட்டங்களில் நான்கில் மும்பை அணி வென்றுள்ளது. தில்லி அணி கடைசியாக விளையாடிய ஆறு பிளேஆஃப்/அரையிறுதி ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது. தில்லி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் இறுதிச்சுற்றில் விளையாடியதில்லை. எனவே இந்தமுறை புதிய மாற்றத்தை உருவாக்க தில்லி அணி வீரர்கள் பாடுபடுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...