ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாக வென்றது சிஎஸ்கே!

2021 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 4-வது முறையாக கோப்பையை வென்றது.
தோனி (கோப்புப் படம்)
தோனி (கோப்புப் படம்)

2021 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 4-வது முறையாக கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.

துபையில் இன்று (அக். 15) நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், டூபிளெஸிஸ் ஆகியோர் களமிறங்கினர். 

ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் பின்னர் அதிரடிக்கு மாறினர். ருதுராஜ் 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதன் பின்னர் களமிறங்கிய ராபின் உத்தப்பா, டூபிளெஸியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சென்னை அணியின் ரன்கள் வேகமாக உயர்ந்தது.

ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து மொயின் அலி களம் கண்டார். 

அவரும் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

அரைசதம் கடந்த டூபிளெஸிஸ் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர், 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் சென்னை அணியின் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் பொறுப்புடன் ஆடி இருவரும் தலா அரை சதத்தைக் கடந்தனர். 

வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் 43 பந்துகளில் 51 ரன்களை எடுத்தபோது சஹார் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து ராணா களமிறங்கினார். ஆனால் அவர் வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த சுனில் நரேன் (2), மோர்கன் (4), தினேஷ் கார்த்திக் (9), ஷாகிப் அல் ஹசன் (0), ராகுல் திரிபாதி (2) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இதன் பிறகு வந்த பெர்கூசனும், ஷிவம் மவியும் இறுதிநேர அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஷிவம் மவி இறுதி பந்துக்கு முந்தைய பந்தில் ஆட்டமிழந்தார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

சென்னை அணியில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, ஹேசில்வுட் தாலா 2 விக்கெட்டுகளையும், சஹார், பிராவோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com