கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம்: ராஜஸ்தானைப் பந்தாடிய ருதுராஜ்!

​ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம்: ராஜஸ்தானைப் பந்தாடிய ருதுராஜ்!


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி இந்த முறையும் நல்ல பவர் பிளேவை அமைத்துத் தந்தனர்.

சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தது.

பவர் பிளே முடிந்தவுடன் சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தினார் சாம்சன். ராகுல் தெவாட்டியா வீசிய 7-வது ஓவரில் முதல் விக்கெட்டாக டு பிளெஸ்ஸி (25) ஆட்டமிழந்தார்.

இந்த முறை சுரேஷ் ரெய்னா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். ஆனால், இம்முறையும் சோபிக்கத் தவறி 3 ரன்களுக்கு தெவாட்டியா சுழலில் வீழ்ந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது. முதல் 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதன்பிறகு ருதுராஜும், மொயீன் அலியும் படிப்படியாக அதிரடிக்கு மாறத் தொடங்கினர். ருதுராஜும் 43-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். தெவாட்டியா வீசிய 15-வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர் பறக்கவிட்டு அதிரடியான மிரட்டலைத் தொடங்கினார் ருதுராஜ். ஆனால், அதே ஓவரில் மொயீன் அலி 21 ரன்களுக்கு ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடுவும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இருந்தபோதிலும், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் எப்படிப் போட்டாலும், எங்கு போட்டாலும் பவுண்டரிகளுக்கு விரட்டி ரன் ரேட்டை அதிரடியாக உயர்த்தினார் ருதுராஜ்.

ஜடேஜாவும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார்.

19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. ருதுராஜ் 95 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆனால், ஸ்டிரைக்கில் ஜடேஜா இருந்தார். முதல் பந்தில் சிக்ஸரையும், அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரிகளையும் ஜடேஜா விளாச, ருதுராஜின் சதமடிக்கும் வாய்ப்பு கேள்விக்குள்ளானது.

எனினும், கடைசி 2 பந்துகள் ஸ்டிரைக்குக்கு வந்தார் ருதுராஜ். 5-வது பந்தில் ரன் இல்லை. கடைசி பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டு சதமடித்தார் ருதுராஜ்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com