ஐபிஎல் போட்டியில் 4-ம் இடத்துக்குப் போட்டியிடும் 4 அணிகள்: இனி என்ன செய்யவேண்டும்?

கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை....
ஐபிஎல் போட்டியில் 4-ம் இடத்துக்குப் போட்டியிடும் 4 அணிகள்: இனி என்ன செய்யவேண்டும்?

ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை, தில்லி, பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டன.

4-ம் இடத்தைப் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற 4 அணிகள் போட்டியிடுகின்றன. கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டதால் அந்த அணிக்கு எவ்விதக் கவலையும் இல்லை. 

பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு தலா ஓர் ஆட்டமும் ராஜஸ்தான், மும்பை அணிகளுக்குத் தலா இரு ஆட்டங்களும் உள்ளன.

4-ம் இடத்தைப் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற 4 அணிகளும் என்ன செய்யவேண்டும்? எந்த அணிக்கு அதிக வாய்ப்புள்ளது, எந்த அணி ஆபத்தான கட்டத்தில் உள்ளது? பார்க்கலாம்.

கொல்கத்தா - 12 புள்ளிகள்

4-ம் இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்பு கொல்கத்தா அணிக்கே உள்ளது. நேற்று, ஹைதராபாத்தை வீழ்த்தி தனது வாய்ப்பை அந்த அணி அதிகப்படுத்தியுள்ளது. இதன் நெட் ரன்ரேட் 0.294 என்பது மற்ற 3 அணிகளை விடவும் அதிகமாக உள்ளது தான் மற்ற அணிகளை அச்சுறுத்தி வருகிறது. 

ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தை வென்றால் பிளேஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படலாம். 

ஒருவேளை கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா தோற்றுவிட்டால்? மும்பையும் ராஜஸ்தானும் 12 புள்ளிகளைத் தாண்டாமல் இருக்க வேண்டும். மும்பை ராஜஸ்தானை வென்று கடைசி ஆட்டத்தில் ஹைதராபாத்திடம் தோற்றுவிட்டால் நெட் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும். பிளேஆஃப்பில் ரஸ்ஸல் ஆட்டத்தைக் காண வாய்ப்பு கிடைக்குமா?

ராஜஸ்தான் - 10 புள்ளிகள்

முதலில் மீதமுள்ள இரு ஆட்டங்களையும் ராஜஸ்தான் வெல்லவேண்டும். கடைசி இரு ஆட்டங்களிலும் மும்பை, கொல்கத்தா அணிகளுடன் ராஜஸ்தான் மோதுகிறது. இருவரையும் தோற்கடித்தால் அவர்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றி விடலாம். ஆனால் எல்லா லீக் ஆட்டங்களும் முடிந்து 12 புள்ளிகள் தான் கிடைக்கும் என்றால் நெட் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவது மிகவும் கடினமாகிவிடும். 

மும்பை - 10 புள்ளிகள்

ராஜஸ்தான் நிலைமை தான் மும்பைக்கும். நெட் ரன்ரேட் மோசமாக உள்ளது. மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் முதலில் வெல்லவேண்டும். அப்போதும் கூட பிளேஆஃப் வாய்ப்பு உறுதியில்லை. ராஜஸ்தானை கொல்கத்தா வீழ்த்திவிட்டால் நெட் ரன்ரேட் அடிப்படையில் அந்த அணி பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும். விளையாட்டில் சில சமயம் அதிசயங்கள் நடக்கும். அப்படி ஏற்பட்டால் மும்பை பிளேஆஃப்புக்குச் செல்லும்.

 பஞ்சாப் - 10 புள்ளிகள்

பல வெற்றி சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் அணி கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது எனலாம். சிஎஸ்கேவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் லீக் சுற்றின் முடிவில் 12 புள்ளிகளை வைத்திருக்கும். ராஜஸ்தானிடம் கொல்கத்தா மிக மோசமாகத் தோற்கவேண்டும். மேலும் எந்த அணியும் 14 புள்ளிகள் எடுக்காமல் இருக்க வேண்டும். அப்போது பஞ்சாப்புக்கு வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் நடக்குமா எனத் தெரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com