ஜடேஜாவுக்கு முன்பு தோனி களமிறங்கியபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

ஆட்டத்தை முடித்தார் தோனி. சிஎஸ்கே 9-வது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு நுழைந்தது.
ஜடேஜாவுக்கு முன்பு தோனி களமிறங்கியபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?
Published on
Updated on
2 min read

தில்லி அணி அளித்த இலக்கு.173 ரன்கள், 120 பந்துகளில்.

சிஎஸ்கே இலக்கை நன்றாகவே விரட்டியது. இத்தனைக்கும் முதல் ஓவரில் 1 ரன்னுடன் டு பிளெஸ்சிஸ் ஆட்டமிழந்தாலும் எதிர்பாராமல் அதிரடியாக விளையாடிய உத்தப்பாவால் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. 13-வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார்கள் ருதுராஜும் உத்தப்பாவும். 14-வது ஓவரின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் டாம் கரண். இதனால் 19 பந்துகளில் பவுண்டரி எதுவும் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள். திடீரென ஆட்டம் தில்லி பக்கம் சாய்வது போல நிலைமை மாறியது. சிஎஸ்கே ரசிகர்கள் பதற்றமானார்கள். 

12 பந்துகளில் 24 ரன்கள் என்கிற பரபரப்பான கட்டத்துக்கு ஆட்டம் நகர்ந்தது. 19-வது ஓவரை வீசிய அவேஷ் கான் முதல் பந்திலேயே ருதுராஜை 70 ரன்களில் வெளியேற்றினார். 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை. 5 விக்கெட்டுகள் மீதமிருந்தன. அடுத்ததாக ஜடேஜா களமிறங்க வேண்டும் என்றுதான் அனைத்து சிஎஸ்கே ரசிகர்களும் வேண்டியிருப்பார்கள். 

ஆனால் தோனி களமிறங்கியபோது பலரும் தோனியா என்றுதான் சமூகவலைத்தளங்களில் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கதை முடிந்தது என்று அப்போதே சிலர் பயந்திருப்பார்கள்.

காரணம், இந்த வருட ஐபிஎல் போட்டியில் தோனியின் பேட்டிங் வெகு சுமார். 

இந்தமுறை ஐக்கிய அரபு அமீரகத்தில் தோனி எடுத்த ரன்கள் - 3, 11*, 1, 14*, 18, 12.

கடைசிக்கட்டத்தில் களமிறங்குவதால் குறைவான ரன்கள் தான் கிடைக்கும் என்றாலும் சிக்ஸர்கள் அடிக்கவும் விரைவாக ரன்கள் எடுக்கவும் தோனி தடுமாறுவது தான் பிரச்னை. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 101 பந்துகளை எதிர்கொண்ட தோனி 96 ரன்கள் தான் எடுத்திருந்தார். 100க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்! 2 சிக்ஸர்கள் மட்டுமே.

ஆனால் ஜடேஜா அற்புதமாக விளையாடி வருகிறார். இந்த வருடம் அவருடைய ஸ்டிரைக் ரேட் - 145.51. 9 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இதனால் தோனிக்கு முன்பு ஜடேஜா களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் எண்ணியதிலும் தவறில்லை. ஆனால், நடந்தது வேறு. 

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் யுவ்ராஜ் சிங்குக்கு முன்பு தோனி களமிறங்கி சாதித்தது போல நேற்றும் ஜடேஜாவுக்கு முன்பு தோனி களமிறங்கினார்.

6 பந்துகளில் 18 ரன்கள். 1 சிக்ஸர், 3 பவுண்டரிகள்.

ஆட்டத்தை முடித்தார் தோனி. சிஎஸ்கே 9-வது முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு நுழைந்தது.

இனிமேல் ஜடேஜாவுக்கு முன்பு தோனி தான் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com