முகப்பு விளையாட்டு ஐபிஎல்
கில் அதிரடி தொடக்கம்: இலக்கை எட்டுமா கொல்கத்தா? கட்டுப்படுத்துமா பெங்களூரு?
By DIN | Published On : 11th October 2021 09:56 PM | Last Updated : 11th October 2021 09:56 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் 139 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவர் பிளேவில் அதிரடி காட்டி வருகிறது.
ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் திங்கள்கிழமை விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க | நரைன் வலையில் சிக்கிய பெங்களூரு பேட்டர்கள்: கொல்கத்தாவுக்கு 139 ரன்கள் இலக்கு
139 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். முதல் ஓவரில் கில் பவுண்டரியும், இரண்டாவது ஓவரில் வெங்கடேஷ் சிக்ஸரும் அடித்து அதிரடி தொடக்கத்துக்கு அடித்தளம் போட்டனர். 3-வது ஓவரில் முகமது சிராஜ் 3 ரன்கள் மட்டும் கொடுத்துக் கட்டுப்படுத்தினாலும், 4-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் விளாசி மீண்டும் அதிரடிக்கு மாறினார்.
சிராஜ் மீண்டும் நல்ல ஓவரை வீசி பவுண்டரிகள் கொடுக்காமல் 5-வது ஓவரைப் போட்டார். பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் படேலை அறிமுகப்படுத்தினார் கேப்டன் விராட் கோலி.
அவரும் தனது வழக்கமான பாணியில் மெதுவாகப் பந்துவீசி கில் விக்கெட்டைக் கைப்பற்றினார். அவர் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.