அவசியமான சிக்ஸருடன் இன்னிங்ஸை முடித்த ஷ்ரேயஸ்: கொல்கத்தாவுக்கு 136 ரன்கள் இலக்கு

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் ரன் எடுக்க நேரம் எடுத்துக்கொள்ள, முதலிரண்டு ஓவர்களில் ரன் உயரவில்லை.

ஷகிப் அல் ஹசன் வீசிய 3-வது ஓவரில் பிரித்வி ஷா சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து துரிதமாக விளையாடத் தொடங்கினார்.

இந்த நிலையில், 4-வது ஓவரிலேயே சுனில் நரைன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த ஓவரில் தவான் 2 சிக்ஸர்கள் அடித்து ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினார்.

வருண் திருப்புமுனை:

ஆனால், 5-வது ஓவரில் அறிமுகப்படுத்தப்பட்ட வருண் சக்ரவர்த்தி முதல் பந்திலேயே பிரித்வி (18) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

இதன்பிறகு, ரன் ரேட் குறையத் தொடங்கியது. தவானுடன் இணைந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் பாட்னர்ஷிப் அமைத்தாலும், ரன் ரேட் உயரவில்லை. 10 ஓவர் முடிவில் டெல்லி அணி 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதிரடிக்கு மாற முயற்சித்த ஸ்டாய்னிஸ் 18 ரன்களுக்கு ஷிவம் மவி வேகத்தில் போல்டானார். இதன்பிறகு, பவுண்டரிகள் போகவில்லை என்ற நெருக்கடியால் ஷ்ரேயஸ் ஐயரும், தவானும் பவுண்டரிக்கு எண்ணினர். இந்த முயற்சியில் வருண் சுழலில் தவான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

கேப்டன் ரிஷப் பந்த் அடுத்த ஓவரிலேயே 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

டெல்லி ஆட்டத்தில் பவுண்டரி அடிப்பது மட்டுமே நோக்கம் என்பது தெரிந்தது. இதனால், வருண் வீசிய 17-வது ஓவரில் புதிதாகக் களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மயரும் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். ஆனால், அவரது அதிர்ஷ்டம் அது நோபால் என்பது தெரியவந்தது. 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி லாக்கி பெர்குசன் ஓவரில் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் ஹெட்மயர். வாய்ப்பைக் கடைசி வரை தக்கவைத்துக்கொள்ளாமல் 19-வது ஓவரில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

ஆனால், ஷ்ரேயஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கும், கடைசி பந்தை சிக்ஸருக்கும் பறக்கவிட்டு மிரட்டினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயஸ் 30 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா தரப்பில் வருண் 2 விக்கெட்டுகளையும், ஷகிப் மற்றும் ஷிவம் மவி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com