என்ன ஆச்சு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் போட்டியில் மீண்டும் தடுமாற ஆரம்பித்துள்ளது.
பும்ரா
பும்ரா

5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற மும்பை அணி ஐபிஎல் 2021 போட்டியில் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.

புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது.

ஐபிஎல் கோப்பையை வென்று ஹாட்ரிக்குக்கு முயற்சி செய்யும் ஓர் அணிக்கு இந்த நிலைமை ஏற்படலாமா?

துபையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கோலி 51, மேக்ஸ்வெல் 56, பரத் 32 ரன்கள் எடுத்தார்கள். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு விளையாடிய மும்பை அணி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அவர் 4 விக்கெட்டுகளை எடுத்ததால் 18.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது மும்பை அணி. சஹால் 3 விக்கெட்டுகளும் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். ஆட்ட நாயகன் விருது மேக்ஸ்வெல்லுக்குக் கிடைத்தது.

ஐபிஎல் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் எடுத்த எந்த ஓர் அணியும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததில்லை. இந்தத் துயரம் நேற்று மும்பை அணிக்கு ஏற்பட்டது. 

57 ரன்கள் வரை ஒரு விக்கெட்டையும் இழக்காத மும்பை, அதன்பிறகு அனைத்து விக்கெட்டுகளையும் அடுத்த 54 ரன்களுக்கு இழந்துள்ளது. இப்படியொரு நிலைமை அந்த அணிக்கு இதுவரை ஏற்பட்டதேயில்லை. கடைசியாக 2011-ல் பஞ்சாப்புக்கு எதிராகக் கடைசி 9 விக்கெட்டுகளுக்கு 68 ரன்கள் மட்டும் எடுத்தது. இதுவரை காணாத மோசமான தோல்வியில் துவண்டு போயிருக்கிறது ஒட்டுமொத்த மும்பை அணியும்.

ரோஹித் சர்மா, டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொலார்ட், பாண்டியா, கிருனால் பாண்டியா என அதிரடி பேட்டர்களைக் கொண்ட அணிக்கா இந்த நிலைமை என இதர அணிகளும் கொஞ்சம் அதிர்ச்சியாகித்தான் போயிருக்கின்றன. 

பேட்டர்கள் எங்களைக் கீழே தள்ளுகிறார்கள். இது தொடர்ந்து நடைபெறுகிறது. பேட்டர்களுடன் இதுபற்றி பேசினேன். நன்கு விளையாடுவதை நாங்கள் உறுதி செய்யவேண்டும். புள்ளிகள் பட்டியலில் நாங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் மீண்டு வரவேண்டும். இதற்கு முன்பு மீண்டு வந்துள்ளோம். இந்தமுறை அது நடக்கவில்லை. இஷான் கிஷன் திறமையான வீரர். கடந்த வருட ஐபிஎல் போட்டியில் அபாரமாக விளையாடினார். அவர் தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இளம் வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் இப்போதுதான் நுழைந்துள்ளார் என மும்பை அணி பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் ரோஹித் சர்மா.

ஐபிஎல் 2021 போட்டி சென்னையில் ஆரம்பித்தபோது மிகவும் தடுமாறியது மும்பை அணி. சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாக இல்லாததால் அதன் சூழலுக்கு மும்பை பேட்டர்களால் உடனடியாக மாற முடியவில்லை. 5 ஆட்டங்களில் 2-ல் தான் வெற்றி கிடைத்தது. ஆனால் ஐபிஎல் ஆட்டங்கள் தில்லிக்கு மாறிய பிறகு அங்கு நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் மும்பை வென்றது. ஆனால் அவர்களுடைய துரதிர்ஷ்டம், கரோனா பாதிப்பினால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் போட்டியில் மீண்டும் தடுமாற ஆரம்பித்துள்ளது. அங்கு இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி. 

பேட்டர்கள் சொதப்புவதால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறுகிறது மும்பை அணி. ஐபிஎல் 2021 போட்டியில் டி காக் மட்டும் 2 அரை சதங்கள் எடுத்துள்ளார். பொலார்ட் மட்டும் 154 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதல் 30 இடங்களில் பொலார்டும் ரோஹித் சர்மாவும் மட்டும் உள்ளார்கள். இப்படி இருந்தால் எப்படி பிளேஆஃப் கனவு காண முடியும்?

இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ள இஷான் கிஷனும் சூர்யகுமார் யாதவும் ரன்கள் எடுக்க சிரமப்படுவது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சூர்யகுமார் 10 ஆட்டங்களில் 189 ரன்களும் இஷான் கிஷன் 8 ஆட்டங்களில் 107 ரன்களும் எடுத்துள்ளார்கள். சூர்யகுமாரின் ஸ்டிரைக் ரேட் - 129.45 தான். இஷான் கிஷனின் ஸ்டிரைக் ரேட் - 86.99 தான். இதனால் இவர்கள் இருவரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் எப்படி விளையாடுவார்கள் என்கிற கவலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்கள் ஓரளவு பரவாயில்லை. பும்ரா 10 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளும் ராகுல் சஹார் 10 ஆட்டங்களில் 12 விக்கெட்டுகளும் போல்ட் 10 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். 

புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ள மும்பை அணி அடுத்ததாக பஞ்சாப், தில்லி, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. ஒப்பீட்டளவில் தில்லி மட்டுமே மிகவும் சவால் அளிக்கக்கூடிய அணி. கடைசியாக சன்ரைசர்ஸ் அணியுடன் விளையாடுவதால் ஒரு வெற்றியுடன் லீக் சுற்றை முடிக்கவும் வாய்ப்புள்ளது. மீதமுள்ள 4 ஆட்டங்களில் 4-லும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சாத்தியமாகலாம். 7 வெற்றிகள் என்றால் இதர அணிகளை நம்பியிருக்க வேண்டும். இதனால் மீதமுள்ள லீக் சுற்று ஆட்டங்களில் அனைவருடைய பார்வையும் மும்பை இந்தியன்ஸ் அணி மீதுதான் இருக்கும். தடைக்கற்களை எப்படிக் கடந்து மேலேறி வரப்போகிறது மும்பை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com