வார்னர் - சன்ரைசர்ஸ் கூட்டணி பிரியப் போகிறதா?: பயிற்சியாளர் பதில்

வார்னர் - சன்ரைசர்ஸ் கூட்டணி பிரியப் போகிறதா?: பயிற்சியாளர் பதில்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெறாத டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் அணியை விட்டுப் பிரிகிறாரா...

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெறாத டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் அணியை விட்டுப் பிரிகிறாரா என்கிற கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் பதில் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி. துபையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். கேப்டன் வில்லியம்சன் 51 ரன்களும் அபிஷேக் சர்மா 21 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இடம்பெறவில்லை. மேலும் அவர் மைதானத்துக்கும் வரவில்லை. தங்கும் விடுதியிலிருந்து ஆட்டத்தைப் பார்த்து இன்ஸ்டகிராமில் அணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் இன்ஸ்டகிராமில் ரசிகர் ஒருவருக்கு அளித்த பதிலில், துரதிர்ஷ்டவசமாக மீண்டும் விளையாட மாட்டேன். தயவுசெய்து (அணிக்கு) தொடர்ந்து ஆதரவளியுங்கள் என்று பதில் அளித்தது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால்  சன்ரைசர்ஸ் அணியை விட்டு டேவிட் வார்னர் பிரிகிறாரா என்கிற கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் பதில் அளித்துள்ளதாவது:

எங்களால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாது. எனவே இளம் வீரர்கள் ஆட்டத்தில் பங்குபெறும் அனுபவத்தை மட்டுமல்ல, மைதானத்தில் அணியினருடன் இருக்கும் அனுபவத்தையும் பெற வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். டேவிட் வார்னரை மட்டும் நாங்கள் ஹோட்டலில் விட்டுவரவில்லை (கெதர் ஜாதவ், ஷபாஸ் நதீம் போன்ற வீரர்களையும்). எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள பல இளம் வீரர்கள் மாற்று வீரராகக் கூட மைதானத்துக்கு வந்ததில்லை. அவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்து அந்த அனுபவத்தைத் தரவுள்ளோம். இந்த நடைமுறை இன்னும் சில ஆட்டங்களுக்குக்கூடத் தொடரலாம். அதுபற்றி எனக்குத் தெரியாது. ஹோட்டலில் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டு எங்களுக்கு ஆதரவளித்து வருகிறார் டேவிட் வார்னர். 

அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவாரா என்பது பற்றி விவாதிக்கப்படவில்லை. ஒரு பெரிய ஏலத்துக்கு முன்பு இதுதான் கடைசி வருடம். இனிமேல்தான் அதுபற்றிய முடிவுகள் எடுக்கப்படும். பல வருடங்களாக சன்ரைசர்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் பங்களித்துள்ளார். அவர் அடித்த ரன்களுக்காக மிகவும் மதிக்கப்படுகிறார். ஐபிஎல் போட்டியில் இன்னும் நிறைய ரன்களை அவர் எடுப்பார் என நம்புகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com