இஷான் கிஷனை நீக்கியது ஏன்?: ரோஹித் சர்மா விளக்கம்

இஷான் கிஷனை அணியிலிருந்து நீக்கும் முடிவை எடுப்பது கடினமாக இருந்தது.
இஷான் கிஷனை நீக்கியது ஏன்?: ரோஹித் சர்மா விளக்கம்

இளம் வீரர் இஷான் கிஷனை நீக்கியது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இஷான் கிஷன் ஐபிஎல் 2021 போட்டியில் குறைந்த ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்து வருகிறார். இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் 11, 14, 9 என ரன்கள் எடுத்த இஷான் கிஷனை நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நீக்கியது மும்பை. 

அபுதாபியில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டும் எடுத்தது. மார்க்ரம் 42 ரன்கள் எடுத்தார். பும்ரா, பொலார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி, 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. செளரப் திவாரி 45 ரன்களும் பாண்டியா ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார்கள்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிஷனை நீக்கியதற்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

இஷான் கிஷனை அணியிலிருந்து நீக்கும் முடிவை எடுப்பது கடினமாக இருந்தது. ஆனால் ஓர் அணியாக நமக்கொரு வாய்ப்பு தேவை என்பதை உணர்ந்தோம். இஷான் கிஷனிடம் பேசும்போது மிகவும் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார். செளரப் திவாரி நன்கு விளையாடி வருகிறார். சிஎஸ்கேவுக்கு எதிராக அரை சதம் எடுத்தார். இன்னிங்ஸ் முழுக்க விளையாடும் ஒரு வீரர் எங்களுக்குத் தேவை. அதற்கு அவர் சரியாகப் பொருந்துகிறார். இனி யாரும் எங்கள் அணியில் விளையாட மாட்டார்கள் என்று சொல்லவில்லை. இஷான் கிஷன் மீண்டும் நன்றாக விளையாட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com