லக்னௌ சிறப்பான பந்துவீச்சு: 149 ரன்களுக்குக் கட்டுப்பட்டது டெல்லி

லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னௌ சிறப்பான பந்துவீச்சு: 149 ரன்களுக்குக் கட்டுப்பட்டது டெல்லி


லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னருக்கு நடப்பு ஐபிஎல் சீசனில் இது முதல் ஆட்டம்.

இந்த ஆட்டத்தில் வார்னர் நிதானம் காட்ட, பிரித்வி வழக்கம்போல் காட்டாறுபோல் கட்டுக்கடங்காமல் அதிரடி காட்டினார். இதனால், பவர் பிளே முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தது. பிரித்வி 27 பந்துகளில் 47 ரன்களும், வார்னர் 9 பந்துகளில் 3 ரன்களும் எடுத்தனர்.

இதன்பிறகு, பிரித்வி 30-வது பந்தில் அரைசதத்தை எட்டினாலும், லக்னௌ மெதுவாக ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

கௌதம் வீசிய 8-வது ஓவரில் பிரித்வி ஷா சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரிலேயே ரவி பிஷ்னாய் சுழலில் டேவிட் வார்னர் (4) ஆட்டமிழந்தார்.

ரவி பிஷ்னாய் தனது அடுத்த ஓவரில் ரோவ்மேன் பாவெல் (3) விக்கெட்டையும் வீழ்த்தினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததைப் பயன்படுத்தி பவுண்டரிகள் போகவிடாமல் லக்னௌ பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். 15 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, 16-வது மற்றும் 17-வது ஓவரில் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் சர்பிராஸ் கான் அதிரடியை வெளிப்படுத்த அந்த இரண்டு ஓவர்களில் மட்டும் டெல்லிக்கு 31 ரன்கள் கிடைத்தன. ஆனால், கடைசி 3 ஓவர்களில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஆவேஷ் கான் சிறப்பாகப் பந்துவீச அந்த ஓவர்களில் டெல்லி அணியால் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை. கடைசி 3 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே டெல்லி எடுத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்பிராஸ் கான் 28 பந்துகளில் 36 ரன்களும், ரிஷப் பந்த் 36 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர்.

லக்னௌ தரப்பில் பிஷ்னாய் 2 விக்கெட்டுகளையும், கௌதம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com