‘ஈ சாலா கப் நமதே’ முழக்கத்தை ஆரம்பிக்கலாமா?

2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ஆர்சிபி அணி, இந்த ஆண்டிலும் அற்புதமான தொடக்கத்தைத் தந்துள்ளது. 
‘ஈ சாலா கப் நமதே’ முழக்கத்தை ஆரம்பிக்கலாமா?

ஐபிஎல் 2022 போட்டியில் 7 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. கடைசியாக, விராட் கோலி தலைமையில்  2016-ல் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். இந்த வருடம் புதிய கேப்டன், பல புதிய வீரர்கள் என புதிய அணியாகத் தோற்றமளிக்கிறது ஆர்சிபி. 

இந்த வருட லீக் சுற்றில் பாதி ஆட்டங்களை விளையாடியுள்ள ஆர்சிபி அணி 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இது எங்களுக்குப் புதிதல்ல என்கிறார்கள் ஆர்சிபி ரசிகர்கள். 

கடந்த மூன்று வருடங்களாக - 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ஆர்சிபி அணி இதேபோல முதல் 7 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. வழக்கமாக ஐபிஎல் போட்டியில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடும். அந்தப் பட்டியலில் ஆர்சிபியையும் இணைக்க வேண்டும் என்கிற அளவுக்குக் கடந்த மூன்று வருடங்களாக அதன் ஆட்டம் இருக்கிறது. 

நியூசிலாந்தின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெஸ்ஸன், 2019 ஆகஸ்டில் ஆர்சிபி அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதுதான் பெரிய மாற்றத்துக்குக் காரணமாக உள்ளது. ஹெஸ்ஸின் வழிநடத்துதலில் ஆர்சிபி அணியின் அடையாளமே மாறிவிட்டது. 

ஹெஸ்ஸன் வரவுக்குப் பிறகு 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ஆர்சிபி அணி, இந்த ஆண்டிலும் அற்புதமான தொடக்கத்தைத் தந்துள்ளது. 

புதிய கேப்டன் டு பிளெஸ்சிஸ், தினேஷ் கார்த்திக், ஹேசில்வுட், ஹசரங்கா ஆகிய புதிய வீரர்களால் பலம் பெற்றுள்ள ஆர்சிபி அணியில் அனைவருக்கும் பொறுப்புகள் சரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டதுதான் அதன் வெற்றிக்குக் காரணமெனப் பலரும் கூறிவருகிறார்கள். தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல் ஆகியோரை ஆர்சிபி அணி சரியாகப் பயன்படுத்துவதில் இருந்து அதன் திட்டங்களைப் புரிந்துகொள்ளலாம். திட்டங்களில் தெளிவாக இருப்பதுதான் ஆர்சிபி அணியை எல்லோரும் வியக்கும்படி பார்க்க வைக்கிறது. இன்னும் நிறைய நல்ல சேதிகள் காத்திருக்கின்றன. 

2009 முதல் 2016 வரை மூன்று முறை ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற ஆர்சிபி இந்த வருடமாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் கனவு. ஈ சாலா கப் நமதே என்கிற விருப்பம் இந்த வருடமாவது நிறைவேறட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com