ஐபிஎல் போட்டியால் தெ.ஆ. வீரர்களின் கவனம் திசை திரும்பியதா?: கேப்டன் பதில்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசை திருப்பியதா...
ஐபிஎல் போட்டியால் தெ.ஆ. வீரர்களின் கவனம் திசை திரும்பியதா?: கேப்டன் பதில்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசை திருப்பியதா என்கிற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் பவுமா பதில் அளித்துள்ளார். 

செஞ்சுரியனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 37 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மலான் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்தின் டஸ்கின் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணி 26.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் தமிம் இக்பால் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 48 ரன்கள் எடுத்தார். ஒருநாள் தொடரை 2-1 என வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது வங்கதேச அணி. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றுள்ளது. டஸ்கின் அகமதுக்கு ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் கிடைத்தன. கடந்த 20 வருடங்களில் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி ஒருநாள் தொடரில் தெ.ஆ. அணி தோற்றதே இல்லை. 

தென்னாப்பிரிக்க வீரர்கள் இத்தொடரில் மோசமாக விளையாடியதற்கு ஐபிஎல் போட்டியும் ஒரு காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரபாடா, மார்க்ரம் போன்ற தெ.ஆ. வீரர்கள் அடுத்ததாக டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் ஐபிஎல் போட்டியில் விளையாட நேராக இந்தியாவுக்கு வருகிறார்கள் . இதனால் அவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இதுபற்றி தென்னாப்பிரிக்க அணியின் ஒருநாள் கேப்டன் பவுமாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:

இந்தியாவைத் தோற்கடித்த தெ.ஆ. அணி வங்கதேசத்திடம் தோல்வியடைந்து பற்றி எனக்கும் ஆச்சர்யம் உண்டு. நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஐபிஎல் போட்டி தென்னாப்பிரிக்க வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா என்பது பற்றி தனிப்பட்ட முறையில் அவர்களுக்குத் தான் தெரியும். இதுபற்றி அவர்கள் தான் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் ஐபிஎல் போட்டியின் மீதான கவனத்தினால் இங்குத் தோற்றதாகக் காரணம் சொல்ல முடியாது. இந்தியாவுக்கு எதிராக சில அடிகள் முன்னேறிச் சென்றோம். இப்போது சில அடிகள் பின்னால் வந்துள்ளோம். உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற இன்னும் நன்றாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com