வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் திறமையைப் பயன்படுத்திக் கொள்வோம்: டாம் மூடி

வாஷிங்டன் சுந்தர் அற்புதமான ஆல்ரவுண்டர்  என்பதால் தான் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வமாக இருந்தோம்.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானுக்கு எதிராக விளையாடியது போல எல்லா ஆட்டங்களிலும் 8-ம் நிலை பேட்டராக வாஷிங்டன் சுந்தர் களமிறங்க மாட்டார் என சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார். 

புணேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முக்கிய பேட்டர்கள் அனைவரும் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினார்கள். சஞ்சு சாம்சன் 55, படிக்கல் 41, பட்லர் 35, ஹெட்மையர் 32 ரன்கள் எடுத்தார்கள். நடராஜன், உம்ரான் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்தார். அவருடைய பந்துவீச்சில் 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.

சன்ரைசர்ஸ் அணி மிக மோசமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மார்க்ரம் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் 8-வது பேட்டராகக் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் எடுத்தார்கள். சஹார் 3 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா, போல்ட் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2022 போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது ராஜஸ்தான் அணி.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 8-ம் வீரராகக் களமிறங்கியதற்குப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். 14 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த வாஷிங்டன், முன்பே களமிறங்கியிருந்தால் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்கலாம் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. இதுபற்றி சன்ரைசர்ஸ் அணி தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி கூறியதாவது:

வாஷிங்டன் சுந்தர் அற்புதமான ஆல்ரவுண்டர்  என்பதால் தான் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வமாக இருந்தோம். எங்கள் அணியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அவர் உரிய பங்களிப்பை அளிப்பார் எனக் கருதுகிறோம். தற்போது அணியில் உள்ள பேட்டிங் வரிசையால் 8-ம் நிலை வீரராகக் களமிறங்கினார். நிச்சயம் அது அவருடைய நிரந்தரமான இடம் இல்லை. இனி வரும் ஆட்டங்களில் அது இந்த வருடமோ அல்லது அடுத்த வருடங்களிலோ அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது குறித்து அலசுவோம். வாஷிங்டன் சுந்தர் தரமான பேட்டர் என்பதை அறிந்துள்ளோம் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com