என் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை: ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்

சாதிக்கவேண்டும் என்கிற லட்சியம் என்னிடம் உண்டு என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ஷாபாஸ் அகமது - தினேஷ் கார்த்திக்
ஷாபாஸ் அகமது - தினேஷ் கார்த்திக்

என் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை. சாதிக்கவேண்டும் என்கிற லட்சியம் என்னிடம் உண்டு என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசி இரு ஓவர்களில் அதிக ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பட்லர் 70 ரன்களும் ஹெட்மையர் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஹர்ஷல் படேல் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.

இதன்பிறகு பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. ஷாபாஸ் அகமது 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தில் திருப்புமுனையை உருவாக்கிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆர்சிபி அணி 12.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டும் எடுத்திருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 

ஆட்டத்தின் பரிசளிப்பு விழாவில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

என் திறமைக்கு நான் நியாயம் செய்யவேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருந்தேன். கடந்த வருடம் நான் இன்னும் நன்றாக விளையாடியிருக்க வேண்டும். நான் பயிற்சி எடுப்பது வேறுவிதமாக இருக்கும். என் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை என எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். என்னிடம் லட்சியம் உண்டு. ஏதாவது சாதிக்க விரும்புகிறேன். நான் பல மணி நேரம் எடுக்கும் பயிற்சி முறைகளை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இதற்கு முன்பு எடுத்த பயிற்சிகளே இதுபோன்று விளையாடுவதற்குக் காரணம். நான்கு நாள் கிரிக்கெட் ஆட்டங்களை நான் விளையாடுவதில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com