டி20 உலகக் கோப்பைக்கு நடராஜனைத் தேர்வு செய்யாதது ஏன்?: ரவி சாஸ்திரி பதில்

டி20 உலகக் கோப்பையில் அவரைத் தவறவிட்டு விட்டோம்.
டி20 உலகக் கோப்பைக்கு நடராஜனைத் தேர்வு செய்யாதது ஏன்?: ரவி சாஸ்திரி பதில்

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நடராஜன் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடி வருகிறார் நம்ம நடராஜன். முதல் இரு ஆட்டங்களிலும் வழக்கம்போல யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசிப் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகினார் நடராஜன். ஆஸ்திரேலியாவில் அறிமுகமானபோதே நடராஜனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது. ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்கு ஏப்ரல் மாத இறுதியில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதியில் விளையாடி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெற தயாராக இருந்தார் நடராஜன். ஆனால் அங்கு சென்றபிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டதால் மீண்டும் விளையாட முடியாமல் போனது. இந்திய அணியிலும் அவரால் மீண்டும் இடம்பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நடராஜன் தேர்வாகாதது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் கூறியதாவது:

நடராஜன் நன்குப் பந்துவீசி வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக் கோப்பையில் அவரைத் தவறவிட்டு விட்டோம். நல்ல உடற்தகுதியுடன் இருந்திருந்தால் இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடித்திருப்பார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நடராஜனுக்குக் காயம் ஏற்பட்டது. அதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் அவரால் விளையாட முடியவில்லை. கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். மிகத்திறமையுடன் யார்க்கர் பந்துகளை வீசுவார். நீங்கள் நினைப்பதை விடவும் வேகமாகப் பந்துவீசி பேட்டர்களுக்குச் சிரமம் அளிப்பார். ஆஸ்திரேலியாவில் நாங்கள் நடராஜனைத் தேர்வு செய்த எல்லா ஆட்டங்களிலும் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது. டெஸ்டில் அறிமுகமானபோதும் வெற்றியடைந்தோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com