இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணி சிஸ்கே: ஆய்வில் தகவல்
By DIN | Published On : 13th April 2022 05:54 PM | Last Updated : 13th April 2022 05:54 PM | அ+அ அ- |

இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு அணியாக சிஎஸ்கே உள்ளதாகத் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆர்மெக்ஸ் மீடியா என்கிற நிறுவனம், இந்தியாவிலுள்ள உள்ள பல்வேறு நகரங்களில் ஆய்வு நடத்தி எந்த விளையாட்டுக்கு அதிக வரவேற்பு உள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. கடந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் வரை இந்தியாவின் நகரங்களிலும் சிற்றூர்களிலும் 12,000 பேரிடம் ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் 13.63 கோடி விளையாட்டு ரசிகர்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. எவர் ஒருவர் தொலைக்காட்சியிலோ அல்லது ஓடிடியிலோ ஒரு மாதத்துக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நேரலை விளையாட்டைப் பார்த்து ரசிக்கிறாரோ அவரை விளையாட்டு ரசிகராகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு 12.42 கோடி ரசிகர்கள் உள்ளார்கள் என்றும் அதில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4.09 கோடி ரசிகர்கள் உள்ளார்கள் என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...