பேட்டிங்கிலும் தடுமாறும் ரோஹித் சர்மா

ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த பேட்டர்கள்
பேட்டிங்கிலும் தடுமாறும் ரோஹித் சர்மா

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஓர் அணி முதல் 7 ஆட்டங்களில் தோற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா சிஎஸ்கேவுக்கு எதிராக டக் அவுட் ஆனது மும்பை ரசிகர்களுக்கு மேலும் வேதனையை அளித்திருக்கும். 

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார். சிஸ்கேவின் முகேஷ் செளத்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துக் கடைசிப் பந்தில் வெற்றியைப் பெற்று சென்னை ரசிகர்களைக் குஷிப்படுத்தியது. கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உனாட்கட் ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கேவுக்கு இந்த வருடத்தின் 2-வது வெற்றியை அளித்தார் தோனி. ராயுடு 40 ரன்களும் உத்தப்பா 30 ரன்களும் தோனி ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தார்கள்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 7 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியும் இதுபோல முதல் 7 ஆட்டங்களில் தோற்றதில்லை. அதிகமுறை ஐபிஎல் கோப்பைகளை (5) வென்ற மும்பை அணி இதுபோல தோற்றிருப்பது யாரும் எதிர்பாராத ஒன்று. புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி கடைசி இடத்தில் உள்ளது. இதனால் கடந்த வருடம் போல இந்தமுறையும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளது மும்பை.

இந்தச் சோகம் போதாதென்று பேட்டிங்கிலும் மோசமாக விளையாடி வருகிறார் கேப்டன் ரோஹித் சர்மா. நேற்று, முகேஷ் செளத்ரி பந்துவிசிசில் டக் அவுட் ஆனார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் அதிகமுறை டக் அவுட் ஆன பேட்டர் என்கிற பெயரை எடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த பேட்டர்கள்

14 - ரோஹித் சர்மா
13 - பியூஷ் சாவ்லா
13 - ஹர்பஜன் சிங்
13 - மன்தீப் சிங்
13 - பார்தீவ் படேல்
13 - ரஹானே
13 - ராயுடு 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மாவின் ரன்கள்

41, 10, 3, 26, 28, 6 & 0.

இதனால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்  ரோஹித் சர்மா. பேட்டிங்கும் சரியில்லை, அணியையும் சரியாக வழிநடத்தவில்லை என அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மேலும் அணித் தேர்விலும் ரோஹித்தின் முடிவுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மீதமுள்ள ஏழு ஆட்டங்களை மும்பை வென்றாலும் பிளேஆஃப் உறுதியாகுமா என்பது சந்தேகமே. இதனால் நெருக்கடியான நிலையில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com