ரியான் பராக்: மறக்க முடியாத நாள்!

அஸ்ஸாமைச் சேர்ந்த ரியான் பராக்குக்கு 20 வயது.
ரியான் பராக்: மறக்க முடியாத நாள்!

அஸ்ஸாமைச் சேர்ந்த ரியான் பராக்குக்கு 20 வயது. 17 வயதில் யு-19 உலகக் கோப்பை வெற்றியாளராக அறியப்பட்டார். 

2019 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். 38 ஆட்டங்களில் 2 அரை சதங்கள் எடுத்துள்ளார். 

கடந்த வருடம் 10 இன்னிங்ஸில் 93 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் -  112.04.

இருந்தும் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3.8 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ரியான் பராக்கின் திறமையை ராஜஸ்தான் லேசாக நினைக்கவில்லை. அவரால் சில ஆட்டங்களில் வெற்றியைத் தேடித்தர முடியும் என நம்பிக்கை வைத்திருந்தது. 

ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்துக்கு முன்பும் 12, 5, 8, 18, 5 ரன்கள் என மோசமாக விளையாடியிருந்தார் ரியான் பராக். இதனால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். 

நேற்று, ரியான் பராக் களத்துக்கு வந்தபோது 9.3 ஓவர்களில் 68/4 எனத் தடுமாறிக் கொண்டிருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 

ஆனால் தனது அருமையான ஆட்டத்தால் தனது அணிக்கு வாழ்வளித்தார் ரியான் பராக். 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ராஜஸ்தான் அணி, 144/8 ரன்கள் எடுத்தது. அந்த ஸ்கோரே கடைசியில் வெற்றிக்குப் போதுமானதாக இருந்தது. ஃபீல்டிங்கில் 4 கேட்சுகளைப் பிடித்தார். இந்திய வீரர்களில் பராக் அளவுக்கு மிகவும் அசால்டாக கேட்ச் பிடிக்கும் இன்னொருவரைக் காண முடியாது. அந்தளவுக்கு ஃபீல்டிங்கில் திறமையை வளர்த்துக்கொண்டு நம்பிக்கையுடன் செயல்படுகிறார். 

ராஜஸ்தான் இன்னிங்ஸில் 18-வது ஓவர் வரை 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நிதானமாகவும் பக்குவத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார் பராக். அதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஹேசில்வுட் ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். கடைசி ஓவரை மிகவும் திறமையான ஹர்ஷல் படேல் வீசினார். 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி. ஆட்ட நாயகன் விருது ரியான் பராக்குக்கே வழங்கப்பட்டது. அரை சதமெடுத்து இந்த வருடம் தனது கணக்கை அட்டகாசமாக ஆரம்பித்துள்ளார். 

கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் திறமை எல்லோருக்கும் வந்துவிடாது. ரியான் பராக் அதில் அபாரமான திறமையைக் கொண்டுள்ளார். ராஜஸ்தானின் நம்பிக்கையும் வீண்போகவில்லை. ரியான் பராக்கின் ஆட்டம் இனிமேல் தான் களைகட்டப் போகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com