இதுவே முடிவல்ல: தோல்வி பற்றி ரோஹித் சர்மா

சில தவறுகளை நாங்கள் செய்துள்ளோம். அதனால் திட்டமிட்டபடி சில விஷயங்கள் நடைபெறவில்லை.
இதுவே முடிவல்ல: தோல்வி பற்றி ரோஹித் சர்மா

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் மும்பை - தில்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு விளையாடிய தில்லி அணி இலக்கை அருமையாக விரட்டியது. 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 104 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் லலித் யாதவும் அக்‌ஷர் படேலும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். லலித் யாதவ் 48 ரன்களும் அக்‌ஷர் படேல் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். பசில் தம்பி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டம் முடிந்த பிறகு மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

முதல் ஆட்டமோ கடைசி ஆட்டமோ எதுவாக இருந்தாலும் நன்குத் தயாராகி தான் விளையாட வருவோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே விரும்புவோம். சில தவறுகளை நாங்கள் செய்துள்ளோம். அதனால் திட்டமிட்டபடி சில விஷயங்கள் நடைபெறவில்லை. தோல்வியால் வருத்தம் தான். இதுவே முடிவு அல்ல. ஆடுகளத்தைப் பார்த்தபோது 170 ரன்கள் எடுக்க முடியும் என முதலில் தோன்றவில்லை. எனவே 177 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர். ஆனால் திட்டமிட்டபடி நாங்கள் பந்துவீசவில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com