35 வயதில் முதல்முறையாகக் கவனம் பெறும் ஷெல்டன் ஜாக்ஸன்!

தோனியைப் போல மின்னலென ஸ்டம்பிங் செய்து உத்தப்பாவை ஆட்டமிழக்கச் செய்தார்.
35 வயதில் முதல்முறையாகக் கவனம் பெறும் ஷெல்டன் ஜாக்ஸன்!

12 வயதிலிருந்து மிகவும் விருப்பத்துடன் விளையாடி வந்த கிரிக்கெட்டை இரு வருடங்களுக்கு முன்பு கைவிட நினைத்தார் ஷெல்டன் ஜாக்ஸன். நிராகரிப்பை எவ்வளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும் என வெம்பினார். ட்விட்டரில் நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.

இன்று நிலைமை மாறிவிட்டது. ஷெல்டன் ஜாக்ஸனைத் தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது. இரண்டே ஆட்டங்களில் தான் யார் என்பது நிரூபித்துவிட்டார். 

கரோனாவுக்கு முன்பு ரஞ்சி கோப்பைப் போட்டியின் இரு பருவங்களிலும் நன்கு விளையாடினார் ஜாக்ஸன். ஆனாலும் இந்திய ஏ அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து ட்விட்டரில் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தேர்வுக்குழுவினரைச் சந்தித்தால் அவர்களிடம் இதுபற்றி கேட்கவும் என்று பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஒருமுறை மட்டும் இந்திய ஏ அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் நொந்து போனார். எவ்வளவு ரன்கள் அடித்தாலும் கண்டுகொள்ள மாட்டீர்கள் என்றால் நான் ஏன் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று எண்ணினார். ஆனால் காலம் ஜாக்ஸனின் வருத்தத்தை மெல்ல மெல்ல போக்கியது.

கரோனாவுக்குச் சற்று முன்பு 2020 மார்ச்சில் செளராஷ்டிர அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. அந்தப் பருவத்தில் 809 ரன்கள் எடுத்தார் ஜாக்ஸன். சராசரி - 50.56. ரஞ்சி இறுதிச்சுற்றுக்கு முன்பு 12 வயதில் தன் திறமையைக் கண்டறிந்த பயிற்சியாளர் என்.சி. கோகிலை இழந்தார். கோப்பையை வென்ற முந்தைய நாள், தந்தையானார். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என அவர் உணர்ந்த தருணம் அது. எனக்கு 33 வயது ஆகிவிட்டாலும் என்னால் 22 வயது வீரருடன் சரிக்குச் சமமாகப் போட்டியிட முடியும் என்று அப்போது பேட்டியளித்தார். அஹமதாபாத்தில் வருமான வரித் துறையில் பணி. உள்ளூர் போட்டிகள் இல்லாத சமயங்களில் எல்லோரையும் போல தினமும் அலுவலகம் சென்றுவிடுவார். 

திடீரென புதுச்சேரி அணிக்கு மாறினார். எனினும் ரஞ்சி போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். பிறகு மீண்டும் செளராஷ்டிர அணிக்கு மாறினார். 2021-ல் விளையாடிய இரு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிகளில் 11 இன்னிங்ஸில் 513 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 147.83. அதற்கு முன்பு அவர் இவ்வளவு நன்றாக விளையாடியதில்லை. ரஞ்சி கோப்பையை வென்ற பிறகு கரோனாவால் கிடைத்த ஓய்வில் தனது ஆட்டத்தையும் அணுகுமுறையையும் நிறைய மாற்றினார். கைமேல் பலன்கள் கிடைக்க ஆரம்பித்தன. 

2021 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு ஷெல்டன் ஜாக்ஸனைத் தேர்வு செய்தது கேகேஆர் அணி. இந்தமுறை ரூ. 60 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இதுவரை அவரை கேகேஆர் அணி மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்துள்ளது.

2017-ல் கேகேஆர்  அணிக்காக 4 ஐபிஎல்  ஆட்டங்களில் விளையாடினார் ஜாக்ஸன். இப்போது 5 வருடங்கள் கழித்து 35 வயதில் கேகேஆர் அணியின் எல்லா ஆட்டங்களிலும் ஒரு வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது. 

கேகேஆர் அணியில் சாம் பில்லிங்ஸ் இருந்தாலும் அவர் இதுவரை விக்கெட் கீப்பராகச் செயல்படவில்லை. காரணம் ஆரோன் ஃபிஞ்ச், பேட் கம்மின்ஸ் வந்துவிட்டால் அணியில் பில்லிங்ஸுக்கு இடம் இருக்காது. இதனால் இரு ஆட்டங்களிலும் ஷெல்டன் ஜாக்ஸனே விக்கெட் கீப்பராக இருந்தார். 

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷெல்டன் ஜாக்ஸனின் துடிப்பான விக்கெட் கீப்பிங் அனைவரையும் ஈர்த்தது. தோனியைப் போல மின்னலென ஸ்டம்பிங் செய்து உத்தப்பாவை ஆட்டமிழக்கச் செய்தார். பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 3 ரன்கள் எடுத்தார். இப்படியொருவர் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறாரா என்று பலருக்கும் அன்றுதான் தெரிய வந்தது. 

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் தான் ஜாக்ஸனின் திறமை மேலும் தெரிந்தது. 3 கேட்சுகளும் ஒரு ஸ்டம்பிங்கும் செய்தார். ரூதர்ஃபோர்டின் கேட்சை நம்பமுடியாத வகையில் இடப்பக்கம் பாய்ந்து பிடித்தார். தொலைக்காட்சி வர்ணனையில் இதற்குப் பாராட்டு மழை பொழிந்தார்கள். ஐபிஎல் 2022 போட்டியில் சிறந்த விக்கெட் கீப்பர் ஜாக்ஸன் தான் எனப் பலரும் பாராட்டுவதும் இதனால் புதிய வெளிச்சம் கிடைப்பதும் ஜாக்ஸன் இதுவரை அனுபவிக்காத ஒன்று. 

ஜாக்ஸனின் பேட்டிங் பலத்தைப் பலரும் இன்னும் அறியவில்லை. 2006 முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2011 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஜாக்ஸன் 79 ஆட்டங்களில் 19 சதங்களுடன் 5947 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் ஐபிஎல் மேடையில் சாதித்தால் தான் அது அனைவரையும் போய்ச்சேரும்!

35 வயதில் இந்தியா, இந்திய ஏ அணிகளுக்கு ஜாக்ஸன் தேர்வு செய்யப்படுவாரா என்று தெரியாது. ஆனால் ஒரு மனிதன் பல வருடங்களாக நிராகரிக்கப்பட்டும் கூட அதன் சுவடு தெரியாமல் இளம் வீரரைப் போல உற்சாகமாக ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். ஊரே வியக்கும்படி உள்ளது அவருடைய பங்களிப்பு. காலங்கள் மாறட்டும், கவலைகள் ஓயட்டும், ஷெல்டன் ஜாக்சனுக்குப் புதிய வாழ்க்கை அமையட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com