முகப்பு விளையாட்டு ஐபிஎல்
முயலை முந்திய ஆமை: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷுப்மன் கில்
By DIN | Published On : 11th May 2022 01:34 PM | Last Updated : 11th May 2022 01:34 PM | அ+அ அ- |

நிதானமான ஆட்டத்தை விமர்சித்தவர்களுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் குஜராத் அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில்.
புணே நகரில் நடைபெற்ற லக்னெளவுக்கு எதிரான ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றுள்ளது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் ரன்கள் எடுப்பதற்குக் கடினமாக இருந்ததால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஷுப்மன் கில். கடைசிவரை விளையாடி ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். 16 பந்துகளை எதிர்கொண்ட தெவாதியாவாலும் ஒரு சிக்ஸரும் அடிக்க முடியாமல் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய லக்னெள அணி, 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தீபக் ஹூடா 27 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்ட நாயகன் விருது ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஷுப்மன் கில்லின் நிதானமான ஆட்டத்தைச் சமூகவலைத்தளங்களில் சிலர் விமர்சித்திருந்தார்கள். சுயநலத்துடன் விளையாடிய ஆட்டம் என்கிற அவர்களுடைய விமர்சனம் ஓர் ஊடகத்தில் செய்தியாகவும் வெளியானது. ஆட்டம் முடிந்த பிறகு தன் மீதான விமர்சனம் குறித்த செய்தியைப் பகிர்ந்த ஷுப்மன் கில், முயலை ஆமை முந்திச் சென்றதை விளக்கும் விதத்தில் ஒரு ட்வீட் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
— Shubman Gill (@ShubmanGill) May 10, 2022