ஐபிஎல் போட்டியில் ஏமாற்றமளித்த தமிழக வீரர் ஷாருக் கான்

ஏப்ரல் 20-ல் வாய்ப்பு பெற்ற ஷாருக் கானுக்குக் கடைசியாக நேற்று மற்றொரு வாய்ப்பைத் தந்தது பஞ்சாப் அணி.
ஐபிஎல் போட்டியில் ஏமாற்றமளித்த தமிழக வீரர் ஷாருக் கான்

ஐபிஎல் போட்டியில் வானவேடிக்கை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் ஷாருக் கான், எதிர்பாராத வகையில் மிகச்சுமாராக விளையாடியுள்ளார். 

தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஷாருக் கான் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. டி20, ஒருநாள், ரஞ்சி கோப்பை என அனைத்திலும் சிறப்பாக விளையாடியதால் உண்டான ஆர்வம் இது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே போட்டிகளில் கடைசிக்கட்டங்களில் 26 வயது ஷாருக் கான் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வானார். 

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை இறுதிச்சுற்றில் கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஷாருக் கான் களமிறங்கியிருந்தார். அதனால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் அவரிடம் இருந்தது. கடைசி 7 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. பிறகு கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான அந்தத் தருணத்தில் அற்புதமான சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியை வழங்கினார் அதிரடி வீரர் ஷாருக் கான். அந்த ஆட்டத்தில் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார். 

கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. 11 ஆட்டங்களில் விளையாடி அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 134.21. 10 சிக்ஸர்கள் அடித்தார்.

இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். எனினும் 11 பேரில் ஒருவராகத் தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஞ்சி கோப்பைப் போட்டியில் தில்லி அணிக்கு எதிராக 6 ரன்களில் இரட்டைச் சதத்தைத் தவறவிட்டார். 89 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் ரஞ்சி கோப்பைப் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார் ஷாருக் கான். இரட்டைச் சதமெடுப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷாருக் கான். 148 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகள் அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அடுத்த ஆட்டத்தில் ஒரு அரை சதம் எடுத்தார். 

ஐபிஎல் 2022 ஏலத்தில் ஆரம்பத்தில் ஏலத்துக்கான அடிப்படை விலை - ரூ. 20 லட்சம் என நிர்ணயம் செய்திருந்தார் ஷாருக் கான். பிறகு இந்திய அணிக்குத் தேர்வானதாலும் தன் மீதான அதிக எதிர்பார்ப்பின் காரணமாகவும் அடிப்படை விலையை ரூ. 40 லட்சமாக உயர்த்தினார். கடைசியில் ஏலத்தில் பஞ்சாப் அணி ஷாருக் கானை ரூ. 9 கோடிக்குத் தேர்வு செய்தது. தேசிய அணியில் இடம்பெறாத வீரர்களில் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்களில் ஷாருக் கானுக்கு 2-ம் இடம் கிடைத்தது. (அவேஷ் கான் ரூ. 10 கோடிக்குத் தேர்வானார்.)

ஆனால் வாய்ப்பு வழங்கப்பட்ட முதல் 7 ஆட்டங்களில் 98 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஷாருக் கான். ஸ்டிரைக் ரேட் நூறைத் தாண்டவில்லை. கடைசி ஓவர்களில் சிக்ஸர்களாக அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷாருக் கான், 98 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மட்டுமே அடித்தார். ஸ்டிரைக் ரேட் மிகவும் குறைவாக இருந்ததால் பஞ்சாப் அணி ஷாருக் கானுக்கு ஐபிஎல் போட்டியின் 2-ம் பகுதியில் வாய்ப்பு தரவில்லை. 

ஏப்ரல் 20-ல் வாய்ப்பு பெற்ற ஷாருக் கானுக்குக் கடைசியாக நேற்று மற்றொரு வாய்ப்பைத் தந்தது பஞ்சாப் அணி. பிளேஆஃப் இனி கிடையாது என்று உறுதியானதால் சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு பெற்றதுடன் 3-ம் நிலை பேட்டராகவும் அவரைக் களமிறக்கியது பஞ்சாப் அணி. முதல்முறையாக டி20 கிரிக்கெட்டில் இப்படியொரு வாய்ப்பைப் பெற்றும் ஷாருக் கான் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 3-வது ஓவரின் முடிவில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்ததும் களமிறங்கினார். பவர்பிளேயில் விளையாடுவதால் ஷாருக் கானின் ஆட்டத்தைப் பலரும் எதிர்பார்த்தார்கள். ஒரு சிக்ஸரும் இரண்டு பவுண்டரிகளும் அடித்த ஷாருக் கான், அதிவேகமாகப் பந்துவீசும் உம்ரான் மாலிக்கின் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். நேற்று அவர் அதிக ரன்கள் எடுக்க நல்ல வாய்ப்பு இருந்தும் தவறவிட்டுவிட்டார். 

ஐபிஎல் 2022 போட்டியில் 8 ஆட்டங்களில் 117 ரன்கள், 19 சிக்ஸர்கள், ஸ்டிரைக் ரேட் - 108.33. இதற்காகவா இவரைத் தேர்வு செய்தோம் என பஞ்சாப் அணி நொந்துகொள்ளும் அளவுக்கு விளையாடியுள்ளார். இந்திய அணிக்குத் தேர்வானவர், ஐபிஎல் போட்டியில் தடுமாறியிருப்பது அவருக்குப் பெரிய படிப்பினையாக இருக்கும். இந்திய அணிக்குக் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் வீரரின் தேவை எப்போதும் இருக்கும். ஐபிஎல் போட்டியில் இன்னொருமுறை வாய்ப்பு கிடைக்கும்போது அந்தச் சந்தர்ப்பத்தை ஷாருக் கான் தவறவிட்டு விடக் கூடாது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com