
தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இந்த இணை மும்பைக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. மும்பை இந்தியன்ஸ் 80 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ரோஹித் சர்மா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 0 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, திலக் வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஹார்திக் பாண்டியா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ரொமாரியோ ஷெப்பர்டு வெறும் 10 பந்துகளில் 39 ரன்கள் விளாசி அசத்தினார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் ரொமாரியோ ஷெப்பர்டு 32 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. தில்லி தரப்பில் அக்ஷர் படேல் மற்றும் நோர்கியா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கலீல் அகமது ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேப்பிடல்ஸ் விளையாடி வருகிறது. பவர் பிளே முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.