
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த தில்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்றைய நாளின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சண்டீகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். டேவிட் வார்னர் 29 ரன்கள் எடுத்தும், சாய் ஹோப் 33 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கார் விபத்துக்குப் பிறகு குணமடைந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடிய தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அக்ஷர் படேல் அதிரடியாக 13 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க, ஆட்டத்தின் இறுதியில் அபிஷேக் போரெல் 10 பந்துகளில் 32 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) விளாசி அசத்தினார். இறுதியில் தில்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரபாடா, ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சஹார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகிறது. பவர் பிளே முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.