
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரியான் பராக் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜுரெல் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் சிமர்ஜித் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்க்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ரவீந்திரா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் (22 ரன்கள்), மொயீன் அலி (10 ரன்கள்), ஷிவம் துபே (18 ரன்கள்) மற்றும் ஜடேஜா (5 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 41 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். சமீர் ரிஸ்வி 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சஹால் மற்றும் நண்ட்ரே பர்கர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இறுதியில் 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.