

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் விளையாடியது.
ரிஷப் பந்த் அரைசதம், 167 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது. லக்னௌ அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அய்டன் மார்க்ரம் 6 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, மிட்செல் மார்ஷ் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினர்.
நிதானமாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் போல்டானார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின் களமிறங்கியவர்களில் ஆயுஷ் பதோனி 22 ரன்கள், அப்துல் சமத் 20 ரன்கள் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
சிஎஸ்கே தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கலீல் அமகது மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
விக்கெட் எடுக்காவிட்டாலும், அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் முகமது 4 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதையும் படிக்க: எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன்: கருண் நாயர்
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.