
மகேந்திர சிங் தோனி தாமதமாக களமிறங்குவதற்கான காரணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
ரகசியம் பகிர்ந்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ள நிலையில், மகேந்திர சிங் தோனியால் 10 ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எம்.எஸ்.தோனி களமிறக்கப்படுவார். அவரது உடல் மற்றும் முழங்கால் முன்பு போன்று இல்லை. அவர் நன்றாக ஓடுகிறார். ஆனால், அவரால் 10 ஓவர்களுக்கும் மேலாக களத்தில் நின்று முழுவீச்சில் பேட்டிங்கில் விளையாட முடியாது. அதனால், அவரால் முடிந்த அளவுக்கு போட்டிகளின்போது, அவரது பங்களிப்பை அணிக்கு வழங்குவார்.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.தோனி முன்கூட்டியே களமிறங்கினார். அணியின் தேவைக்கேற்ப அவர் களமிறங்குவார். எம்.எஸ்.தோனியின் தலைமைப் பண்பு மற்றும் அவரது கீப்பிங் அணிக்கு மிகவும் இன்றியமையாதது என கடந்த ஆண்டே கூறியிருந்தேன். அவர் 9-10 ஓவர்களில் ஒருபோதும் களமிறங்க மாட்டார். ஆடுகளத்தில் எந்த வீரர் விளையாடுகிறார் என்பதைப் பொருத்து அவர் 13, 14 ஓவர்களில் களமிறங்குவார் என்றார்.
எம்.எஸ்.தோனி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 9-வது வீரராக களமிறங்கியது மிகப் பெரிய பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.