இன்னும் ஒரு வெற்றி பெற்றால்...: பதக்கத்தை நோக்கி நகரும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள்

குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.
பூஜா ராணி
பூஜா ராணி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மூன்று குத்துச்சண்டை வீரர்கள் காலிறுதிக்கு நுழைந்து பதக்கத்துக்கு அருகில் சென்றுள்ளார்கள்.

குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். இது அவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டியாகும். 

நேற்றைய போட்டியில் அல்ஜீரியாவின் இச்ரக் சாயிப்பை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தினார் பூஜா. இரு முறை ஆசிய சாம்பியனான பூஜா ராணி, தனது காலிறுதியில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரும், இரு முறை ஆசிய சாம்பியனும், 2018 உலக சாம்பியனுமான சீனாவின் லீ கியாங்கை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறார். இதற்கு முன்பு சீன வீராங்கனைக்கு எதிராக இரு போட்டிகளிலும் பூஜா தோல்வியடைந்துள்ளார். இதனால் பதக்கத்தை நெருங்க அவர் மிகவும் போராட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோவ்லினா
லோவ்லினா

குத்துச்சண்டையில் மகளிருக்கான 69 கிலோ பிரிவில் இந்தியாவின் 23 வயது லோவ்லினா போகோஹெயின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா் ஜொ்மனிய வீராங்கனை நாடினே அபெட்ஸை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். அரையிறுதிக்குத் தகுதி பெறும் அனைவருக்கும் பதக்கம் உறுதி என்பதால் காலிறுதியில் லோவ்லினாவின் வெற்றியை இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

சதீஷ் குமார்
சதீஷ் குமார்

ஹெவிவெயிட் பிரிவில் (+ 91 கிலோ) இந்தியாவின் 32 வயது சதீஷ் குமார், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் ஜமைக்காவின் ரிகார்டோ பிரெளனை 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.  காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் பகோடிர் ஜலோலோவை எதிர்கொள்கிறார் சதீஷ் குமார். பகோடிர், நடப்பு உலக சாம்பியன் என்பதால் அரையிறுதிக்கு சதீஷ் குமார் தகுதி பெறுவது சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மூவரும் காலிறுதியில் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்துவார்களா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com