தக்கவைத்துக் கொள்வதாகக் கூறி ஏலத்தில் தன்னைப் புறக்கணித்த ஆர்சிபி மீது கிறிஸ் கெயில் தாக்கு!

அவர்களுக்கு நான் தேவையில்லை என்பதை அறிந்துகொண்டேன். அது பரவாயில்லை... 
தக்கவைத்துக் கொள்வதாகக் கூறி ஏலத்தில் தன்னைப் புறக்கணித்த ஆர்சிபி மீது கிறிஸ் கெயில் தாக்கு!
Updated on
1 min read

இந்த வருட ஐபிஎல் போட்டியில் நான்கு ஆட்டங்களில் 252 ரன்கள். ஒரு சதம் மற்றும் இரு அரை சதங்கள். 23 சிக்ஸர்களுடன் உள்ள ஸ்டிரைக் ரேட் - 161.53.

பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கும் கிறிஸ் கெயில், ஐபிஎல் ஏலத்தில் தன்னை கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்யாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கிறிஸ் கெயில் கூறியதாவது: 

ஆர்சிபி அணியின் மிகப்பெரிய நட்சத்திரம் நான் தான். என்னைத் தேர்வு செய்வது குறித்து அவர்கள் பேசினார்கள். ஆனால் அதைச் செய்யாமல் விட்டது வருத்தமான ஒன்று.

என்னை அணியில் சேர்க்க அவர்கள் விரும்பினார்கள். என்னைத் தக்கவைத்துக் கொள்வதாகவும் கூறினார்கள். ஆனால் அதன்பிறகு அவர்கள் என்னை அழைக்கவே இல்லை. எனவே அவர்களுக்கு நான் தேவையில்லை என்பதை அறிந்துகொண்டேன். அது பரவாயில்லை. 

இதுகுறித்து யாரிடமும் என்னால் சண்டை போட முடியாது. கரீபியன் பிரீமியர் லீக், வங்தேச பிரீமியர் லீக் ஆகிய போட்டிகளில் நான் மிகச்சிறப்பாக விளையாடினேன். புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது. 21 சதங்கள். அதிக அளவிலான சிக்ஸர்கள். இவை கிறிஸ் கெயிலின் திறமையை வெளிப்படுத்தாவிட்டால் வேறு எது என்னை வெளிப்படுத்தும் என்று தெரியவில்லை

ஏலத்தின் ஆரம்பக்கட்டத்தில் என்னை யாரும் தேர்வு செய்யாதது ஆச்சர்யமாகவே இருந்தது. நான் பஞ்சாப் அணிக்கு ஆடவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதுபோல. 

டி20 கிரிக்கெட்டின் பல சாதனைகள் என் வசம் உள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டியையும் அடுத்த வருட ஒருநாள் உலகக் கோப்பையையும் வெல்லவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதுவரை ஐபிஎல் போட்டியை பஞ்சாப் அணி வென்றதேயில்லை. எங்களுடைய உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா மிகவும் ஆர்வத்துடன் இருப்பவர். அவருடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்துவது மிகவும் ஆச்சர்யமானது. எனவே அவர் இந்த வருட ஐபிஎல் கோப்பையை அவர் கையில் ஏந்தவேண்டும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com