கிரிக்கெட்டை ஆக்கிரமித்த பிரமாண்ட வீரர்கள்! புதிய சாதனைப் படைப்பாரா ரகீம் கார்ன்வால்?

கிரிக்கெட்டை ஆக்கிரமித்த பிரமாண்ட வீரர்கள்! புதிய சாதனைப் படைப்பாரா ரகீம் கார்ன்வால்?

2007 உலகக் கோப்பையில் பெர்முடா அணியில் இடம்பெற்றிருந்த டுவைன் லெவ்ராக்கை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ள ரகீம் கார்ன்வால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

26 வயதான ரகீம், 55 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 23.90 பந்துவீச்சு சராசரியுடன் 260 விக்கெட்டுகளும், 24 சராசரியுடன் 2,224 ரன்களும் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 13 அரைசதங்களும் அடங்கும். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முன்னணி வீரர்களான விராட் கோலி, புஜாரா, ரஹானே உட்பட 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக முதல்தரப் போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஜொலிப்பதால், அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை தேர்வாளர் ராபர்ட் ஹெய்ன்ஸ் கூறினார்.

ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளின் ஆடும் லெவனில் இடம்பெற்றால், சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்த மிகப்பெரிய வீரர் எனும் அரிய சாதனையைப் படைப்பார். 6’6” அடி உயரம் கொண்ட ரகீம் கார்ன்வால் சுமார் 140 கிலோ எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 100 கிலோ எடைக்கும் மேல் கொண்ட பல பிரமாண்ட் வீரர்கள் கிரிக்கெட்டை ஆக்கிரமித்துள்ளனர். அதில் குறிப்பிடும்படியாக 2007 உலகக் கோப்பையில் பெர்முடா அணியில் இடம்பெற்றிருந்த டுவைன் லெவ்ராக்கை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

டபள்யூ.ஜி.கிரேஸ், டேவிட் பூண், ஷேன் வார்னே, அர்ஜுன ரணதுங்கா, ஜெஸ்ஸி ரைடர், ரமேஷ் பவார், சமித் படேல் என கொழுக்-மொழுக் வீரர்கள் பலர் விளையாடியிருந்தாலும், ரகீம் கார்ன்வலின் வரவுக்கு முன் விளையாடிய முக்கியமான 5 பிரமாண்ட வீரர்கள் இதோ...

மார்க் காஸ்க்ரூவ்

ஆல்-ரவுண்டரான மார்க் காஸ்க்ரூவ், ஆஸ்திரேலிய அணிக்காக 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த 2006-ல் அறிமுகமான இவரின் இந்த குறுகிய சர்வதேசப் பயணத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் ஒரு ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார் என்பதை ரசிகர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். 100 கிலோ எடைக்கும் மேல் கொண்ட மார்க், பின்னாளில் 20 கிலோ எடை வரை குறைத்துள்ளார். ஆனால், பயனில்லை உடனடியாக தனது பழைய தோற்றத்துக்கு விரைவில் மாறிவிட்டார்.

இன்ஸமாம்-உல்-ஹக்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஸமாம்-உல்-ஹக் அறிமுகமான காலகட்டத்தில் சுமார் 105 கிலோ எடை வரை இருந்துள்ளார். பின்னாட்களில் பெரிய வீரராக உருவெடுத்தபோதும் அவரது எடையில் அதிகளவில் மாற்றங்கள் ஏற்பட்டதில்லை. இதனால், தக்காளி, உருளை என ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளானார். கிரிக்கெட் சரித்திரத்திலேயே ரன்-அவுட் முறையில் அதிகமுறை (40) ஆட்டமிழந்த ஒரே வீரர் இன்ஸமாம் தான்.

காலின் மில்பர்ன்

இங்கிலாந்து அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்களுடன் 654 ரன்கள் குவித்திருந்த காலின் மில்பர்ன் 121 கிலோ எடை கொண்டவர். எதிர்பாரா விதமாக ஏற்பட்ட விபத்தில் ஒரு கண் பார்வையை இழந்தார். இதனால் கிரிக்கெட்டில் இருந்து ஆரம்பகட்டத்திலேயே ஓய்வு பெற்றார்.

டுவைன் லெவ்ராக்

2007 உலகக் கோப்பையை பார்த்தவர்கள் அனைவரும் குறிப்பாக டுவைன் லெவ்ராக்கை மறந்திருக்க மாட்டார்கள். பெர்முடா அணிக்காக விளையாடிய லெவ்ராக்கின் எடை 127 கிலோ. அந்நாட்டின் போலீஸ் அதிராகியான இவர் திருடர்களைப் பிடித்தாரா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், ராபின் உத்தப்பாவின் கேட்சைப் பிடித்ததைப் பார்த்து வியந்தவர்கள் தான் அதிகம். 

வார்விக் ஆம்ஸ்ட்ராங்

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் என்ற பழமொழிக்கு கச்சிதமாய் பொருந்தக்கூடியவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் வார்விக் ஆம்ஸ்ட்ராங். 6 அடிக்கும் மேலான உயரத்துடன், 133 கிலோ எடை கொண்ட வார்விக், பிக் ஷிப் (மிகப்பெரிய கப்பல்) என்ற பட்டப்பெயருடனே அழைக்கப்பட்டார். 50 போட்டிகளில் விளையாடியுள்ள வார்விக், 10 ஆட்டங்களில் ஆஸி. அணியின் கேப்டனாக செயல்பட்டு 8-ல் வெற்றி தேடித்தந்துள்ளார், 2 போட்டிகள் டிராவில் முடிந்தது. இதில் 1920-21 ஆஷஸ் தொடரில் இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வயிட்-வாஷ் முறையில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com