சுடச்சுட

  

  'இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்று'- சோதனையும்! சாதனையும்!

  By Raghavendran  |   Published on : 25th June 2019 06:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lords

   

  டெஸ்ட், 50 ஓவர், டி20 என உலக சாம்பியனாக திகழும் இந்திய அணிக்கு, கிரிக்கெட் வரலாற்றிலேயே ஜூன் 25-ஆம் தேதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்துள்ளது. 

  இந்த நாளில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனையும், சாதனையும் நிகழ்ந்துள்ளது. ஆச்சரியமளிக்கும் விதமாக அவை இரண்டுமே சரியாக 10 வருட இடைவெளிக்குள்ளாக பாரம்பரியமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  1974-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 629 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தது. இதில், டென்னிஸ் அமிஸ் 188, கேப்டன் மைக் டென்னெஸ் 118, பின்னாளில் பிரபல வர்ணணையாளராகத் திகழ்ந்த டோனி கிரேக் 106 என 3 சதங்கள் விளாசப்பட்டது. பிஷன் சிங் பேடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஃபரூக் இன்ஜினியர் 86, குண்டப்ப விஸ்வநாத் 52, சுனில் கவாஸ்கர் 49 ரன்கள் சேர்த்தனர். கிறிஸ் ஓல்ட் 4, மைக் ஹெண்ட்ரிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி வெறும் 42 ரன்களுக்குச் சுருண்டது. கிறிஸ் ஓல்ட் 5, ஜெஃப் அர்னால்டு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். எனவே இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 285 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

  இதன்மூலம் டெஸ்ட் இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோருக்குள் சுருண்டு சோதனைப் பட்டியலில் இந்திய அணி இடம்பெற்றது. மேலும் இதுவே தற்போது வரை இந்திய அணியின் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

  1983-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி இதே லார்ட்ஸ் மைதானத்தில் அப்போதைய பலமிக்க அணியாகத் திகழ்ந்த மேற்கிந்திய தீவுகளை உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கபில்ஸ் டெவில்ஸ் என்றழைக்கப்பட்ட இந்திய அணி சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 183 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதிரடி துவக்க வீரர் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் விளாசினார். ஆண்டி ராபர்ட்ஸ் 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, ஜோயல் கார்னர் 1 விக்கெட் எடுத்தார். மால்கம் மார்ஷல், மைக்கல் ஹோல்டிங் மற்றும் லேரி கோம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

  பின்னர் களமிறங்கிய, உலகக் கோப்பையை தொடர்ந்து 3-ஆவது முறையாக கைப்பற்றிவிடும் என்று கணக்கிடப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விவியன் ரிச்சர்ட்ஸ் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். மதன் லால், மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பல்விந்தர் சந்து 2 விக்கெட்டுகளை கைப்பற்ற கபில்தேவ், ரோஜர் பின்னி தலா 1 விக்கெட் எடுத்தனர்.

  இதனால் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று உலகக் கோப்பையை முதன்முறையாக கைப்பற்றி சாதனைப் படைத்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai