இங்கிலாந்து தொடரில் ஒரு டெஸ்டிலாவது அஸ்வின் விளையாடுவாரா? 

அஸ்வினை வாய்ப்பைத் தட்டிப்பறித்தவர் ஜடேஜா என்று சொல்வதை விடவும் ஷர்துல் தாக்குரைக் குறிப்பிடலாம்.
இங்கிலாந்து தொடரில் ஒரு டெஸ்டிலாவது அஸ்வின் விளையாடுவாரா? 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி, அஸ்வின் இல்லாமல் விளையாடியது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

சமீபகாலமாக வெளிநாடுகளிலும் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். ஆஸ்திரேலியாவில் லயனை விடவும் அற்புதமாகப் பந்துவீசினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றிலும் அஸ்வினின் பந்துவீச்சு மெச்சும்படி இருந்தது. பேட்டிங்கிலும் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் சதமடித்தார். 

பிறகு ஏன் அஸ்வினுக்கு இடமில்லை.

இங்கிலாந்தில் சுழற்பந்துவீச்சுக்குக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கும். இதனால் வேகப்பந்துவீச்சாளர்களை நம்பியே எல்லா அணிகளும் களமிறங்கும். அதிகபட்சமாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளலாம். இந்தச் சூழலில் தான் அஸ்வினை விடவும் ஜடேஜா முந்துகிறார்.

பேட்டிங்கில் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வருகிறார் ஜடேஜா. அதனால் அவருடைய பேட்டிங் பலத்தை இழக்க இந்திய அணி விரும்புவதில்லை. மேலும் ஃபீல்டிங்கில் எப்போதும் ஜடேஜாவால் ஏராளமான நன்மைகள் கிடைத்துள்ளன. 

அஸ்வினை வாய்ப்பைத் தட்டிப்பறித்தவர் ஜடேஜா என்று சொல்வதை விடவும் ஷர்துல் தாக்குரைக் குறிப்பிடலாம். ஆஸ்திரேலியாவில் பேட்டிங் திறமையை நிரூபித்ததால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அவரைக் கருதுகிறது இந்திய அணி. இங்கிலாந்தில் இப்படியொரு வீரர் அணியில் இருப்பது அவசியம் என்பதால் ஷர்துல் தாக்குருக்கு அணியில் இடம் கிடைத்து விடுகிறது. ஹார்திக் பாண்டியா இல்லாத குறையை ஷர்துல் தாக்குர் தீர்த்து வைக்கிறார் என்றும் சொல்லலாம். 

முதல் டெஸ்ட் முடிந்த பிறகு கோலி கூறியதாவது: இந்தத் தொடரில் இதே பந்துவீச்சுக் கூட்டணியுடன் தான் (4 வேகப்பந்து வீச்சாளர்கள் + ஒரு சுழற்பந்துவீச்சாளர்) விளையாட வாய்ப்புள்ளது. அதேநேரம், சூழலுக்கு ஏற்றாற்போல அணியில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் எங்களுடைய பலம். இந்தப் பந்துவீச்சுக்கூட்டணிதான் முன்னேறிச் செல்ல சரியாக இருக்கும் என்றார். 

இந்தக் காரணங்களால் அஸ்வினுக்காக வாய்ப்புகள் குறைந்துவிடுமா? இங்கிலாந்து தொடரில் ஒரு டெஸ்டிலாவது விளையாடுவாரா? 

2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெறுகிறது. அங்கு வெயில் அதிகமாக இருந்தால் ஆடுகளத்தின் தன்மை மாறும். இதனால் இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குத் தேவைப்படுகிறபோது அஸ்வின் அணியில் மீண்டும் இடம்பெறலாம். ஓவல் மைதானத்தில் விளையாடிய கவுன்டி ஆட்டத்தில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகள் எடுத்தார். இதுபோல சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் அஸ்வின் அழைக்கப்படலாம். ஜடேஜா, ஷர்துல் தாக்குருக்குக் காயம் ஏற்படும்போதோ அல்லது அவர்கள் மோசமாக விளையாடும்போதோ அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். 

வெளிநாடுகளில் இரு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடும் சூழல் இல்லாததால் அஸ்வின் அதில் சிக்கிக்கொண்டுள்ளார். கிரிக்கெட்டில் மாற்றங்களுக்கு எல்லையே இருக்காது. அதுவும் இந்த கரோனா சூழலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கவேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com