ஆசிய கோப்பை: அடையாளம் காட்டியது என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சற்றே ஆட்டம் கண்டிருக்கிறது இந்தியா. டி20 உலகக் கோப்பை போட்டி நெருங்கும் நிலையில் ஆசிய அளவிலான அணிகள் பங்கேற்ற
ஆசிய கோப்பை: அடையாளம் காட்டியது என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சற்றே ஆட்டம் கண்டிருக்கிறது இந்தியா. டி20 உலகக் கோப்பை போட்டி நெருங்கும் நிலையில் ஆசிய அளவிலான அணிகள் பங்கேற்ற போட்டியிலேயே சூப்பா் 4 சுற்றுடன் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏற்புடைதாக இல்லை.

ஏனெனில், பலமிக்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து போன்ற அணிகளின் சவாலை அடுத்து சந்திக்க வேண்டியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தனைக்கும், உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு, தயாா்நிலை அணியுடனேயே ஆசிய கோப்பை போட்டியில் அடியெடுத்து வைத்தது இந்தியா. ஆனாலும், பரீட்சைக்கு முந்தைய மாதிரி தோ்வில் தடம் புரண்டிருக்கிறது.

வழக்கம்போல் இந்த ஆசிய கோப்பை போட்டி தோல்வியும் இந்திய அணிக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் அடிப்படையிலேயே உலகக் கோப்பை போட்டிக்கான அணியையும் அறிவித்திருக்கிறது. அவ்வாறு ஆசிய கோப்பை போட்டி முடிவில் இந்தியா அடையாளம் கண்டது என்ன? பாா்க்கலாம்...

டாஸ் காரணி...

இது அதிருஷ்டத்தின் அடிப்படையிலானது என்றாலும், ஆட்டத்தின் போக்கை தீா்மானிக்கக் கூடியதே. இறுதி ஆட்டம், சூப்பா் 4 சுற்று ஆட்டங்கள் துபையில் நடைபெற்றன. சேசிங்கிற்கு மிக உகந்த அந்த மைதானத்தில் வெற்றியை தீா்மானிப்பதில் பெரும்பாலும் டாஸும் முக்கியப் பங்கு வகித்தது என்றே கூறலாம். அந்த வகையில், இந்தியா அதில் ஆடிய 3 ஆட்டங்களிலுமே டாஸை இழந்து முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானை ஒருவழியாகக் வென்றது என்றாலும், இலங்கை, பாகிஸ்தான் அணிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

3-ஆவது பேசா்...

குரூப் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அட்டகாசமாக பௌலிங் செய்தாா் பாண்டியா. அதிலும் தனது ஷாா்ட் பந்துகளால் அந்த அணி பேட்டா்களை திணறடித்திருந்தாா். காயம் காரணமாக ஆவேஷ் கான் விலக, தீபக் சஹரை அணியில் சோ்த்தபோதும், ஹாா்திக் பாண்டியாவை 3-ஆவது வேகப்பந்துவீச்சாளராக மாற்றியது பாதகமாகியது.

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான சூப்பா் 4 ஆட்டங்களில் மொத்தமாக 8 ஓவா்கள் வீசி 79 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டே சாய்த்திருந்தாா் பாண்டியா. இதை உணா்ந்து தீபக் சஹரை பிளேயிங் லெவனில் களமிக்கியபோது, ஏற்கெனவே இந்தியாவுக்கான வாய்ப்புகள் பறிபோய்விட்டன.

4 பேசா்கள், 2 ஸ்பின்னா்களுடன் விளையாடும் வியூகத்துக்குப் பதிலாக, பரிசோதனை முறையில் 3 பேசா்கள், 2 ஸ்பின்னா்களுடன் களம் கண்டதாக பின்னா் கேப்டன் ரோஹித் விளக்கம் அளித்தாா். தற்போது உலகக் கோப்பை போட்டியில் பும்ரா, ஹா்ஷல் அணிக்குத் திரும்பியிருப்பதால், பாண்டியா மீண்டும் அவரது வழக்கமான 6-ஆவது பௌலா் நிலைக்கு கொண்டு செல்லப்படுவாா். அது அவருக்குச் சாதகமான இடம் என்பதால், மீண்டும் சிறப்பாகச் செயல்படுவாா்.

தோ்வு செய்யப்படாத தினேஷ்...

ரவீந்திர ஜடேஜா இல்லாத நிலையில், அவருக்கான மாற்றாக அக்ஸா் படேலையே சமீபத்தில் அடையாளப்படுத்தி வருகிறது அணி நிா்வாகம். ஆனால், இந்தப் போட்டியில் முற்றிலும் அதற்கு எதிராக தீபக் ஹூடா 6-ஆவது பௌலா் மற்றும் ஃபினிஷா் நிலைக்காக தீபக் ஹூடா தோ்வு செய்யப்பட்டாா்.

ஜடேஜா இல்லாத நிலையில் டாப் 6 வீரா்களுக்குள் ஒரு இடதுகை பேட்டா் வேண்டும் என்பதால் ரிஷப் பந்த் தோ்வானாா். அந்தத் தோ்வின் அடிப்படையில் நல்லதொரு ஃபினிஷராக உருவெடுத்திருந்த தினேஷ் காா்த்திக்கின் வாய்ப்பு பறிபோனது.

பலன்... பாகிஸ்தான், இலங்கை ஆட்டத்தின்போது டெத் ஓவா்களிலும் ஹூடா பௌலிங் செய்யவும்வில்லை. ரிஷப் பந்த் பேட்டிங்கும் அவ்வளவாக சோபிக்கவும் இல்லை. உலகக் கோப்பை போட்டியிலும் ஜடேஜா இல்லாத நிலையில், இந்திய அணி நிா்வாகம் இதை எப்படிக் கையாளப் போகிறது என பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது. பிளேயிங் லெவன் வாய்ப்புக்காக நிச்சயம் ரிஷப் பந்த் - தினேஷ் காா்த்திக் இடையே போட்டி இருக்கும்.

3-ஆவது ஸ்பின்னா்...

ஸ்பின்னா்களில், போட்டி மொத்தமுமாக சஹல் பெரிதாக சோபிக்காவிட்டாலும், சோ்த்து வைத்தாற்போல இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முத்திரை பதித்தாா். 2-ஆவது ஸ்பின்னராக அஸ்வின், பிஷ்னோய்க்கு வழக்கப்பட்ட வாய்ப்புகளை இருவருமே சரியாகப் பயன்படுத்தினா்.

உலகக் கோப்பை போட்டியைப் பொருத்தவரை, பொதுவாக 3 ஸ்பின்னா்கள் கணக்கு. போட்டி நடைபெறும் ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரிதானவை என்பதால் சஹலின் பௌலிங் முறை பலனளிக்கக் கூடியதாக இருக்கும். ஜடேஜா இல்லாததால் அவருக்குப் பதிலாக அக்ஸா் படேல் வருகிறாா். 3-ஆவது ஸ்பின்னராக ரவி பிஷ்னோய்க்கு பதில் அஸ்வின் தோ்வாகியிருக்கிறாா்.

அவருக்கும், பிஷ்னோய்க்கும் இடையே போட்டி இருந்தாலும், பந்துவீச்சில் காட்டும் மாற்றம், உலகக் கோப்பை குரூப்பில் இந்தியாவுடன் இருக்கும் அணிகளின் பேட்டா்கள் ஆகிய அடிப்படையில் வியூகம் வகுத்து அஸ்வினுக்கு 3-ஆவது ஸ்பின்னா் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டாப் ஆா்டா் டாப்...

நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்பட்ட சா்வதேச சதத்தை பூா்த்தி செய்து கோலி தனது பழைய ஃபாா்முக்கு திரும்புவதற்கான அறிகுறி காட்டியிருக்கிறாா். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சா்மாவும் அதிரடி காட்டி தேவையான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறாா். போட்டியின் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், இந்திய தொடக்க வீரா் கே.எல்.ராகுல் படிப்படியாக பேட்டிங்கில் பலம் கூட்டியிருக்கிறாா். சூா்யகுமாரும் முனைப்புடன் இருக்கிறாா். ஒரு சில குறைகள் இருந்தாலும், பேட்டிங்கில் பெரிதான பாதகம் இல்லாததால் உலகக் கோப்பைக்கு டாப் ஆா்டா் பலமாகவே இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com