
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 79 பந்துகளில் 6 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார்.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டேவிட் வார்னர் 107 பந்துகளில் 117 ரன்களும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 107 பந்துகளில் 108 ரன்களும் குவித்தனர்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் டேல் ஸ்டெயின், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
மில்லர் விளாசல்: 372 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டி காக்-ஆம்லா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்தது. ஆம்லா 33 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 33 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதையடுத்து ரிலீ ரொசாவ் களமிறங்க, மறுமுனையில் வெளுத்து வாங்கிய டி காக் 49 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள்
குவித்து வெளியேறினார். இதையடுத்து ஜே.பி.டுமினி களமிறங்க, ரிலீ ரொசாவ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு டுமினியுடன் இணைந்தார் டேவிட் மில்லர். ஆரம்பம் முதலே மில்லர் அதிரடியில் இறங்க, தென் ஆப்பிரிக்கா 217 ரன்களை எட்டியபோது டுமினியின் விக்கெட்டை இழந்தது. அவர் 20 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு பிரிட்டோரியஸ் மெதுவாக ரன் சேர்க்க, அதிரடியாக ஆடிய மில்லர் 45 பந்துகளில் அரை சதம் கண்டார். அந்த அணி 265 ரன்களை எட்டியபோது பிரிட்டோரியஸ் 15 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து மில்லருடன் இணைந்தார் பெலுக்வாயோ. இந்த ஜோடி ஆஸ்திரேலியாவிடம் இருந்து வெற்றியைப் பறித்தது. ஆஸ்திரேலிய பெளலர்களை பந்தாடிய மில்லர் 69 பந்துகளில் சதமடித்தார். மில்லர் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்துக்கு வெளியே பறந்தது. இறுதியில் 49.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவித்து வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.
மில்லர் 118, பெலுக்வாயோ 39 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் ஜான் ஹேஸ்டிங்ஸ் 10 ஓவர்களில் 79 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.