நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேச உணர்வால் "தங்க' மகனானேன்!

விளையாட்டில் ஓர் இலக்கை அடைவதற்கு உடல் பலமும், உதவியும் மட்டுமே தேவை எனப் பலரும் நினைக்கிறோம். ஆனால், அதைவிட முக்கியம் தேச உணர்வுதான்.

News image

பயிற்சியாளர் சத்யநாராயணாவுடன் மாரியப்பன் .படம்: டி.ராமகிருஷ்ணன்.

Updated On :24 செப்டம்பர் 2016, 2:18 am

வே.சுந்தரேஸ்வரன்

விளையாட்டில் ஓர் இலக்கை அடைவதற்கு உடல் பலமும், உதவியும் மட்டுமே தேவை எனப் பலரும் நினைக்கிறோம். ஆனால், அதைவிட முக்கியம் தேச உணர்வுதான். ஆம்... அந்த உணர்வால்தான் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன்.
கிராமத்து இளைஞருக்கே உரித்தான எளிமையான தோற்றம், கூச்ச சுபாவம், சாதித்து விட்டோம் என்ற பெருமை எள் அளவும் இல்லாத அடக்க உணர்வு ஆகியவற்றை அடையாளமாகக் கொண்டிருக்கிறார் மாரியப்பன். இவர் சமீபத்தில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் உலக சாதனையோடு தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். முற்றிலும் கிராமப் பின்னணியைக் கொண்ட, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தங்கப் பதக்கத்தோடு பிரேசிலில் இருந்து தாயகம் திரும்பிய மாரியப்பன் உள்ளிட்ட நான்கு வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி ஊக்குவித்தார். பிரதமரின் பாராட்டு மழையில் நனைந்திருந்த இளம் வீரர் மாரியப்பன், தன்னால் இத்தகைய சாதனையை எப்படி எட்ட முடிந்தது என்பது குறித்து "தினமணி'யிடம் பகிர்ந்து கொண்டவை:
சேலம் மாவட்டம், பெரிய வடுகம்பட்டி கிராமம்தான் எனது சொந்த ஊர். பள்ளியில் படிக்கும் போதே விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபட்டேன். உயரம் தாண்டுதலில் என்னால் சிறப்பாகச் செயல்பட முடிந்தது. இதையடுத்து, அதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் பிபிஏ படித்தேன். கல்லூரிகள் இடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டேன். துனிஷியா கிராண்ட்ப்ரீ போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றேன்.
பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தேன். அதற்கு எனது குடும்ப பொருளாதாரமும், பின்னணியும் கைகொடுக்கவில்லை. அப்போது, கைகொடுக்க முன்வந்தவர் எனது பயிற்சியாளர் சத்ய நாராயணன்தான். அவர், எனது பயிற்சிக் காலத்தில் குடும்பத்திற்கு பண உதவி செய்தார். அதேபோன்று கடுமையாகப் பயிற்சி செய்யவும், முயற்சி செய்யவும் என்னை ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கம்தான் பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க உதவியது. அவரை நான் கடவுளுக்கு நிகராக நினைக்கிறேன். அதேபோன்று, எனது தாய் சரோஜா என்னை எப்போதும் ஊக்குவித்தார். தங்கத்துடன்தான் தாயகம் திரும்பி வர வேண்டும் என்று என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
பாரா ஒலிம்பிக் போட்டியின்போது பார்வையாளர்கள் தரப்பில் இருந்து என்னைப் பலரும் உற்சாகப்படுத்தினர். போட்டியின் கடைசிக் கட்டத்தில் "இந்தியாவுக்குத் தங்கம் கிடைக்க வேண்டும். நமது தேசம் வெல்ல வேண்டும். இதன்மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்' என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். இதுதான் எனக்குத் தங்கத்தைப் பெற்றுத் தந்ததாக நினைக்கிறேன்.
பொதுவாக, என்னைப் போன்ற வீரர்கள் பலருக்கும் இது போன்ற உலக அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். ஆனால் நானோ, எப்படியாவது தேசத்திற்கு தங்கம் பெற்றுத் தர வேண்டும் என்று வித்தியாசமாக விரும்பினேன். தேச உணர்வால்தான் நான் இன்று "தங்க' மகனாகியுள்ளேன். இந்த வெற்றிக்குப் பிறகு பலரும் என்னைப் பாராட்டுகின்றனர். இது எனக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
எனக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தில் (சாய்) பயிற்சியாளர் பணி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி கிடைத்தால் அதன் மூலம் பல திறமைமிக்க வீரர்களை உருவாக்கப் பாடுபடுவேன். எனது அடுத்த இலக்கு அடுத்த இரு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும். தற்போது பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டியுள்ளேன். அடுத்த ஒலிம்பிக்கில் 2.10 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் எனது அடுத்த இலக்கு.
எனது கிராமத்தில் விளையாட்டு அகாதெமியைத் தொடங்கி தடகள வீரர்கள் பலருக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளேன். தமிழக முதல்வர் என்னைப் பாராட்டி ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை நேரில் சந்திக்கும் போது எனது கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நிலம் மற்றும் பிற உதவிகள் வழங்குமாறு கேட்க உள்ளேன் என்று வெற்றிக்களிப்புடன் கூறினார் மாரியப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.