சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணியின் தேர்வு எப்போது?

புதிய வருமானப் பகிர்வில் ஐசிசியுடனான கருத்துவேறுபாடால் இன்னமும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியை...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணியின் தேர்வு எப்போது?
Updated on
1 min read

புதிய வருமானப் பகிர்வில் ஐசிசியுடனான கருத்துவேறுபாடால் இன்னமும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்காமல் உள்ளது.  

ஐசிசியின் நிர்வாகிகள் குழு கூட்டத்தின் முதல் நாள் துபையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், ஐசிசியின் நிர்வாக அமைப்பு மற்றும் வருமானப் பகிர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரும் முன்மொழிவின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது, 10-இல் 9 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. பிசிசிஐ மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தது.

அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் பகிர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான வாக்கெடுப்பில் 8 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவாக வாக்களித்தன. தொடக்கத்தில் இருந்தே அந்த மறுசீரமைப்பு முறை மீது பிசிசிஐ-க்கு உடன்பாடு இல்லாத காரணத்தால், இரண்டின் மீதான வாக்கெடுப்பிலும் எதிராகவே வாக்களித்தது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) நிர்வாகம் மற்றும் வருவாய் பகிர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஐசிசிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஐசிசியின் இந்த மறுசீரமைப்பு முறைகளுக்கு, குறிப்பாக வருவாய் பகிர்வு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) இது மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது

எனினும், புதிய வருமானப் பகிர்வு முறையின்படி, பிசிசிஐக்கு அடுத்த 8 ஆண்டுகளுக்கு ரூ.1,879 கோடியை ஐசிசி ஒதுக்கீடு செய்ய உள்ளது. முந்தைய வருமானப் பகிர்வின் படி பிசிசிஐக்கு கிடைத்த தொகையுடன் (ரூ.3,657 கோடி) ஒப்பிடுகையில், தற்போதைய தொகையானது அதில் ஏறக்குறைய பாதியாகும். எனினும், இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் பிசிசிஐயின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிசிசிஐக்கான வருமானப் பகிர்வை மேலும் அதிகரித்து ரூ.2,502 கோடியாக வழங்க ஐசிசி தயாராக இருப்பதாகவும், எனினும் அந்தத் தொகையை ரூ.2,887 கோடியாக அதிகரித்துப் பெற பிசிசிஐ முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்பது குறித்து, மே 7-ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ சிறப்புப் பொதுக் குழு கூட்டத்துக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார். ஒருவேளை இந்திய அணி கேட்கிற தொகை கிடைக்காவிட்டால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கலந்துகொள்ளாது என்று கூறப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் மே 7-ம் தேதிதான் முடிவெடுக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. அதற்குள் பிசிசிஐ - ஐசிசி இடையேயான கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சாம்பியன்ஸ் டிராபி ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com