இந்தியா-இலங்கை 2-ஆவது ஒரு நாள் ஆட்டம்: பல்லகெலேவில் இன்று நடைபெறுகிறது

இந்தியா-இலங்கை இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் பல்லகெலேவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பல்லகெலேவில் பயிற்சியின்போது கால்பந்து விளையாடி மகிழும் இந்திய வீரர் கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி.
பல்லகெலேவில் பயிற்சியின்போது கால்பந்து விளையாடி மகிழும் இந்திய வீரர் கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி.

இந்தியா-இலங்கை இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் பல்லகெலேவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, இந்த ஆட்டத்தில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறது. ஆனால், இலங்கை அணியோ தொடர் தோல்வியின் காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
முதல் ஆட்டத்தில் தோற்ற பிறகு இலங்கை அணியினர் ஹோட்டலுக்கு திரும்பும் வழியில், அந்நாட்டு ரசிகர்கள் அவர்களுடைய பேருந்தை மறித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதவிர பயிற்சியாளர் மற்றும் மேலாளர் இடையிலான மோதல் காரணமாக அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது இலங்கை அணி.
மிரட்டும் இந்தியா: இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது. தொடக்க வீரர் ஷிகர் தவன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். கடந்த ஆட்டத்தில் 132 ரன்கள் குவித்த அவர், இந்த ஆட்டத்திலும் பெரிய அளவில் ரன் குவிப்பார் என நம்பலாம். மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா, கடந்த ஆட்டத்தில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவரும், இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது. இலங்கையின் பந்துவீச்சு மோசமாக இருப்பதால், இந்தியா முதலில் பேட் செய்தால் மட்டுமே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால் சூழலுக்கு தகுந்தவாறு ராகுல், கேதார் ஜாதவ் ஆகியோர் முன்வரிசையில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், பாண்டியா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பலம் சேர்க்கிறது. பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவும் சிறப்பாக செயல்பட்டு வருவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.
திணறும் இலங்கை: இலங்கை அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் தடுமாறி வருகிறது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நிரோஷன் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, குஷல் மென்டிஸ் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். மிடில் ஆர்டரில் கேப்டன் உபுல் தரங்கா, மேத்யூஸ், கபுகேதரா போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், அவர்கள் யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது கவலையளிக்கிறது.
ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. எனவே அவருக்குப் பதிலாக மிலிந்தா ஸ்ரீவர்த்தனா இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மலிங்கா, விஸ்வா பெர்னாண்டோ ஆகியோரையே நம்பியுள்ளது இலங்கை. இவர்களால் கடந்த ஆட்டத்தில் சிறிதளவுகூட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் சன்டாகனுக்குப் பதிலாக அகிலா தனஞ்ஜெயா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பந்துவீச்சாளர்களால் கடந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை. இது மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 19 ஒரு நாள் ஆட்டங்களில், இந்தியா 15 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
மிரட்டும் மழை
போட்டி நடைபெறவுள்ள பல்லகெலே மைதானம் மின்னொளியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடாது என்று சொல்ல முடியாது. அதேநேரத்தில் பல்லகெலேவில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com