ரோஹித் சர்மாவை இவ்வளவு தூரம் கொண்டாட வேண்டுமா?: முன்னாள் காதலி சாடல்!

நான் அவருடைய வாழ்க்கையில் இருந்தபோது என்னையும் இதுபோல பெருமைப்படுத்துவார்...
ரோஹித் சர்மாவை இவ்வளவு தூரம் கொண்டாட வேண்டுமா?: முன்னாள் காதலி சாடல்!
Published on
Updated on
1 min read

ரோஹித் சர்மாவின் வெற்றியை விடவும் பாரா நீச்சல் வீராங்கனை காஞ்சன்மாலாவின் வெற்றியைத்தான் நாம் அதிகம் கொண்டாடியிருக்கவேண்டும் என்று நடிகையும் ரோஹித் சர்மாவின் முன்னாள் காதலியுமான சோஃபியா ஹயத் கூறியுள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதலில் 126 பந்துகளில் 116 ரன்கள் குவித்திருந்த ரோஹித், கடைசி 27 பந்துகளில் 92 ரன்கள் (11 சிக்ஸ், 3 பவுண்டரி) குவித்தார். இது ரோஹித் சர்மாவின் 3-வது இரட்டைச் சதம். ஒருநாள் போட்டியின் சரித்திரத்தில் இதுவரை எந்தவொரு வீரரும் 3 இரட்டைச் சதங்களை எடுத்ததில்லை.

இதையடுத்து ரோஹித் சர்மாவின் முன்னாள் காதலி சோஃபியா ஹயத் கூறியதாவது:

ரோஹித் சர்மா வெற்றியடைவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் மக்கள் எந்தளவுக்குப் பாலின பாகுபாடு பார்க்கிறார்கள் என்பதை எண்ணி ஆச்சர்யப்படுகிறேன். அவர் ஒரு ஆண் என்பதால் தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்பதை ரோஹித் சர்மா புரிந்துகொள்ளவேண்டும். பார்வை இல்லாதபோதும் காஞ்சன்மாலா என்கிற பாரா நீச்சல் வீராங்கனை சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்றபோது யாரும் இந்தளவுக்கு மகிழ்ச்சி அடையவில்லை. இதுதான் அதிகம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். 

தனக்குக் கிடைக்கும் பாராட்டுகளைத் தன்னுடைய துணைக்குச் சமர்ப்பணம் செய்வது ரோஹித் சர்மாவின்  வழக்கம். நான் அவருடைய வாழ்க்கையில் இருந்தபோது என்னையும் இதுபோல பெருமைப்படுத்துவார். ஆனால் அவர் மோசமாக விளையாடும்போது மட்டும்தான் நான் அழுவேன். ரோஹித் சர்மா என்னை மறப்பதற்கு ஏற்றாற்போல ஒரு பெண்ணை அவர் தேர்வு செய்ததில் எனக்கு மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார். 

2012-ம் வருடம் ரோஹித் சர்மாவும் சோஃபியா ஹயத்தும் காதலர்களாக இருந்து பிறகு பிரிந்தார்கள். ரோஹித் சர்மா-ரித்திகா சஜ்டே கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இந்த வருடம் 2-ஆவது திருமண நாள். இந்த நாளில் மகிழ்ச்சியுடன் களம் இறங்கிய ரோஹித், இரட்டை சதத்தைப் பதிவு செய்து தனது மனைவிக்கு பரிசாக அளித்தார். முன்னதாக, அவர் 200 ரன்களை நெருங்குவதற்குள் ரித்திகா பதற்றமானார். எனினும், ரோஹித் இலக்கை அடைந்தவுடன் அவர் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

இரட்டை சதம் அடித்ததுடன், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் இந்த நாளை மிகச் சிறந்த நாளாக கருதுகிறேன். இந்த நாள் (டிச. 13) எனக்கு திருமண நாளாகவும் அமைந்துவிட்டது. இரட்டை சதத்தை திருமண நாள் பரிசாக எனது மனைவிக்கு அளிக்கிறேன் என்று ஆட்ட நாயகன் விருது வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com