ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட் : அலாஸ்டர் குக் அசத்தல்: வலுவான நிலையில் இங்கிலாந்து

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 491 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.
ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட் : அலாஸ்டர் குக் அசத்தல்: வலுவான நிலையில் இங்கிலாந்து
Updated on
2 min read

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 491 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.
அந்த அணியின் தொடக்க வீரர் அலாஸ்டர் குக் சாதனையுடன் இரட்டைச் சதம் கடந்து நிலைக்க, முதல் இன்னிங்ஸில் அந்த அணி 164 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் ஒயிட்வாஷ் கனவு கலைந்துள்ளது.
மெல்போர்ன் நகரில் பாக்ஸிங் டே அன்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் சதமடித்து அணியை வலுப்படுத்தினார். கேப்டன் ஸ்மித் 76, ஷான் மார்ஷ் 61 ரன்கள் சேர்த்து உதவ, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 119 ஓவர்களில் 327 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, புதன்கிழமை முடிவில் 57 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. அலாஸ்டர் குக் 104, கேப்டன் ஜோ ரூட் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் அரைசதம் கடந்த ஜோ ரூட், 61 ரன்களில் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மலான் 14 ரன்களில் நடையைக் கட்டினார். மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் அலாஸ்டர் குக் 150 ரன்களைக் கடக்க, மறுபுறம், ஜானி பேர்ஸ்டோவ் 22, மொயீன் அலி 20, கிறிஸ் வோக்ஸ் 26, டாம் கியுரன் 4 என விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்காதபோதும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலாஸ்டர் குக் 360 பந்துகளில் 23 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் அடித்தார். இது அவரது 5-ஆவது இரட்டைச் சதமாகும்.
இதனிடையே, குக்குடன் இணைந்த பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அதிரடியாக ஆடி 59 பந்துகளில் அரைசதம் எட்டினார். இவ்வாறாக 3-ஆம் நாள் முடிவில் 144 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 491 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து. அலாஸ்டர் குக் 244 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆன்டர்சன் ரன்கள் இன்றியும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட், நாதன் லயன், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

விவியன் ரிச்சர்ட்ஸை விஞ்சிய குக்
3-ஆவது நாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் விளாசிய அலாஸ்டர் குக், 209 ரன்களை எட்டியபோது புதிய சாதனை படைத்தார். இது, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நிய பேட்ஸ்மேன் ஒருவர் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ், கடந்த 1984-ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் 208 ரன்கள் எட்டியதே அதிகபட்சமாக இருந்தது.

* தனது 151-ஆவது டெஸ்டில் ஆடி வரும் அலாஸ்டர் குக், டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 11,956 ரன்களை எட்டியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6-ஆவது வீரர் என்ற பெருமையை பெற்ற குக், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாராவை (11,953) பின்னுக்குத்தள்ளினார்.

* டெஸ்ட் போட்டிகளில் குக் 150 ரன்களுக்கு மேலாக எடுப்பது இது 11-ஆவது முறையாகும். அதிலும், ஆஸ்திரேலியாவில் எடுப்பது இது 3-ஆவது முறையாகும். இங்கிலாந்து வீரர்களில் வேறு எவரும் ஒட்டுமொத்தமாக இத்தனை முறை 150 ரன்களை தாண்டியதில்லை.

''இந்தத் தொடரில் இது எனக்கு உணர்வுப்பூர்வமான தருணம். பின்னடைவில் இருந்து மீண்டு வந்து அணிக்காக இந்த ஸ்கோரை எட்டியது மகிழ்ச்சி. எனினும், இதனை தாமதமாகச் செய்தது வெட்கத்துக்கு உரியது. இந்த இரட்டைச் சதத்துக்கு முன்னால் வரையில், என்னை அணியிலிருந்து நீக்குவதற்கு தேர்வாளர்களுக்கு தார்மிக காரணம் இருந்தது'' 
- அலாஸ்டர் குக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com